FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொதுப்பணித் துறையினரின் மறைமுக மீன் ஏலம் தடுக்கப்படுமா?

பொதுப் பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் மறைமுகமாக நடைபெறும் மீன் ஏலத்தைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

பொதுப் பணித் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் மறைமுகமாக நடைபெறும் மீன் ஏலத்தைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் 912 ஏரிகள் உள்ளன. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த மழை காரணமாக அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. இதனால் ஏரிகளில் மீன்களும் அதிக அளவு காணப்படுகின்றன. இந்த மீன்களை ஏலம் விடும் முயற்சியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 மீன்களை ஏலம் எடுப்பதில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெறுகின்றன.
 மீன்களை அதிகாரிகள் ஏலம் விடும்போது அப் பகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு மீன் ஏலம் எடுப்பவர்களை எடுக்கவிடாமல் தடுப்பதாகவும் பல்வேறு இடங்களில் இருந்து புகார்கள் வருகின்றன. இவர்களே சில ஆள்களை நியமித்து குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்கின்றனர்.
 பின்னர் அக் கிராமத்தில் உள்ள ஊராட்சித் தலைவர், முக்கியப் பிரமுகர் அனைவரும் சேர்ந்து அக் கிராமத்தின் அரசுப் பிரதிநிதி போல் தனியாக அவர்கள் ஒரு ஏலத்தை நடத்துகின்றனர். அப்போது பெரும் தொகைக்கு ஏலம் விடப்படுகிறது. அதில் இருந்து ஏலம்போன குறைந்த தொகையை அரசுக்குச் செலுத்திவிட்டு, மீதத் தொகையை இவர்கள் வைத்துக் கொள்கின்றனர்.
 இதனால் அரசுக்கு பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் இதுபோல் பல்வேறு கிராமங்களில் ஏலம் விடப்பட்ட பிறகு ஒரு மறைமுக மீன் ஏலம் நடைபெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 இதைத் தடுக்க ஒவ்வொரு ஏரியிலும் எவ்வளவு மீன்கள் இருக்கும் என்பதை ஆய்வு செய்து குறைந்தபட்ச விலையை பொதுப்பணித் துறை அதிகாரிகள் சரியாகக் கணக்கிட வேண்டும். அரசு அதிகாரிகள் நேரடியாக ஏலம் விடும்போது மீன் ஏலம் எடுப்பவர்களைத் தடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நேரங்களில் அதிகாரிகளே கூட இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 அனைத்து ஏரிகளிலும் நீர் நிரம்பி மீன்கள் அதிக அளவு இருப்பதால் மீன் ஏலத்தை முறைப்படுத்தி உள்ளூர் பிரமுகர்கள் மறு ஏலம் விடுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments