FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

ஊராட்சி மன்ற செயலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

முகையூர் ஊராட்சி மன்றச் செயலர் ஏரி, குளம், சாலை ஆகிய பணிகளுக்காக அரசு வழங்கிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி அவர்

Updated On : 21 ஆகஸ்ட் 2018, 4:20 am IST
சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலை, முகையூர் பேருந்து நிறுத்தத்துக்கு அருகே நடைபெற்ற சாலை மறியல்.
பகிர்:


முகையூர் ஊராட்சி மன்றச் செயலர் ஏரி, குளம், சாலை ஆகிய பணிகளுக்காக அரசு வழங்கிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் முகையூர் பேருந்து நிறுத்துமிடம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்யூர் வட்டம், லத்தூர் ஊராட்சி ஒன்றியம், முகையூர் ஊராட்சி உள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்றச் செயலராக வேணுகோபால் கடந்த 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால், லத்தூர் ஊராட்சி ஒன்றியம், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர் சிறப்புநிலை அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
இதனிடையே, இப்பகுதி மக்கள் ஊராட்சி மன்றச் செயலர் வேணுகோபால் மீது முறைகேடு புகாரை எழுப்பினர். குறிப்பாக, முகையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாஞ்சையம்மன் கோயில் குளம் சீரமைப்பு உள்ளிட்ட திட்டங்களில் அவர் முறைகேடு செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதில் ஏற்கெனவே கட்டிய வீட்டில் பெயிண்ட் அடித்து புதிய வீடு வழங்கியதைப் போல் கணக்கு காட்டி தொகையை எடுத்துக் கொள்வது போன்ற பலவழிகளில் அரசு நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கிராமசபைக் கூட்டத்துக்கு வந்த ஒரு சிலர் இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, இந்தப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. வேண்டுமானால் அந்த இடத்துக்கு போய் பாருங்கள் என அவர் அலட்சியத்துடன் பதிலளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். 
இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களின் மூலம், வாஞ்சையம்மன் கோயில் குளத்தின் அடிப்பகுதி மண்ணை எடுப்பதற்கு வேணுகோபால் திங்கள்கிழமை காலை அவசரகதியில் ஏற்பாடு செய்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக அப்பகுதி இளைஞர்கள் அந்தப் பெண்களிடம் கேட்டனர். அதற்கு, குளத்தின் மண்ணை எடுத்து குளக்கரையை சீரமைக்குமாறு ஊராட்சி மன்ற செயலர் சொன்னதாக தெரிவித்தனர். 
அப்போது, அப்பகுதி ஆண்களும், பெண்களும் ஊராட்சிமன்ற செயலர் மீது கடுமையாக குற்றம்சாட்டினர். அவர்கள், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிய வந்த பெண்களிடம் எந்த வேலையும் செய்ய வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டனர். அரசின் நிதியைக் கையாடல் செய்து வரும் ஊராட்சிமன்ற செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர் இங்கு வந்து பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் முகையூர் பேரூந்து நிறுத்தமிடத்துக்கு அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதனால், சென்னையில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் வந்த அனைத்து வாகனங்களும் ஸ்தம்பித்தன. இது பற்றிய தகவல் கூவத்தூர் காவல் ஆய்வாளர் (பொ) கன்னையா, உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோருக்கும், லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேரில் வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இப்பகுதியின் பணிகளைக் கேட்டறிந்து உரிய விசாரணை செய்து அரசின் நிதி தவறாக கையாடல் செய்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் அதற்கான ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments