FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

பெயரளவிற்கே நடைபெறும் ஏரிகள் சீரமைப்புப் பணி? விவசாயிகள் புகார்

சிவன்கூடல் ஏரியில் நடைபெற்று வரும் ஏரி சீரமைத்தல் மற்றும் கால்வாய்கள் நவீனப்படுத்தும் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரிக்கரை ஓரத்தில் இருந்து மண் எடுத்து கரையில் கொட்டப்பட்டு வருவதால் ஏரியின் கரை

Updated On : 21 ஆகஸ்ட் 2018, 2:52 am IST
பகிர்:

சிவன்கூடல் ஏரியில் நடைபெற்று வரும் ஏரி சீரமைத்தல் மற்றும் கால்வாய்கள் நவீனப்படுத்தும் பணிக்காக பொக்லைன் இயந்திரம் மூலம் ஏரிக்கரை ஓரத்தில் இருந்து மண் எடுத்து கரையில் கொட்டப்பட்டு வருவதால் ஏரியின் கரை பலமிழந்து உடைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்பாலாறு உபவடிநிலப் பகுதியில் அடங்கிய சிவன்கூடல், ராமானுஜபுரம், மதுரமங்கலம், சிங்கிலிப்பாடி உள்ளட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 11 ஏரிகள் மற்றும் 11 நீர்வரத்துக் கால்வாய்கள் உள்ளன. 
அவற்றை உலக வங்கி நிதியுதவியுடன் நீர்வள மற்றும் நிலவளத் திட்டத்தின் மூலம் ரூ. 3.14 கோடி மதிப்பீட்டில் சீரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் திட்டத்தில் ஏரிக்கரைகளை சீரமைக்கவும், பலப்படுத்தவும் ஏரியில் இருந்து லாரிகள் மூலம் மண் எடுத்து வந்து ஏரிக்கரையில் கொட்டுவது வழக்கம். இந்நிலையில், இத்திட்டத்தின் மூலம் சிவன்கூடல் பகுதியில் உள்ள ஏரிக்கரையை பலப்படுத்தும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஏரிக்கரையை பலப்படுத்த ஏரியில் இருந்து லாரிகளில் மண் எடுத்து வந்து கொட்டாமல், ஏரிக்கரையின் ஓரங்களில் உள்ள மண்ணையே பொக்லைன் இயந்திரம் மூலம் எடுத்து கரையில் கொட்டி சமப்படுத்தி வருகின்றனர். இதனால் ஏரிக்கரைகள் பலமிழந்து போகும் நிலை தோன்றியுள்ளது. மழைக்காலங்களில் ஏரிகள் நிரம்பும்போது அவற்றின் கரைகளில் உடைப்பு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.
இதுகுறித்து சிவன்கூடல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியது: ராமானுஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட ராமானுஜபுரம், சிவன்கூடல் ஆகிய கிராமங்களில் பொது ப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிகள் உள்ளன. 
இதில் சிவன்கூடல் கிராமத்தில் உள்ள ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவுடையது. இந்த ஏரியின் நீரைப் பயன்படுத்தி இப்பகுதியில் மூன்று போகமும் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. 
இதேபோல் 200 ஏக்கர் பரப்பளவு உள்ள ராமானுஜபுரம் ஏரி நீரைப் பயன்படுத்தி 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், சிவன்கூடல் ஏரியில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிக்காக ஏரியின் கரைகளில் இருந்து மண் அள்ளப்படுகிறது. இதனால் மழைக் காலங்களில் ஏரி நிரம்பும்போது ஏரிக்கரை எளிதில் உடைந்து விடும் நிலை காணப்படுகிறது. எனவே ஏரிக்கரை சீரமைப்பு பணிக்காக கரைகளில் இருந்து மண் எடுப்பதைத் தடுக்கவும், ஏரிக்கரையை பலமாக அமைக்கவும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் மார்க்கண்டனிடம் கேட்டதற்கு, ஏரிக்கரையில் இருந்து மண் எடுத்து கொட்டப்பட்டு வருவதாக எங்களுக்கும் புகார் வந்துள்ளது. 
இதையடுத்து, திங்கள்கிழமை பணி நடைபெறாமல் நிறுத்தினோம். ஏரிக்கரையை பலமாக அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments