காவல் நிலையத்தில் நிகழ்ந்த மரணம் தொடர்பான வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேட்டில், போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான விசாரணையை
காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேட்டில், போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு. இவர் அச்சிறுப்பாக்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். சிற்றரசுக்கும், ஆனந்தன் என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மே 1 -ஆம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிற்றரசு, அடுத்த நாள் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது மனைவி வெண்ணிலா, தனது கணவரின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், பிரேத பரிசோதனையின்போது தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்க கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வி.பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞர் எமிலியாஸ், 'பிரேத பரிசோதனையைக் கண்காணிக்க, சென்னை கீழ்ப்பாக்கம் தடய அறிவியல் துறை மருத்துவர் செல்வக்குமார், சென்னை மருத்துவக் கல்லூரி தடய அறிவியல் துறை இயக்குநர் பராசக்தி, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் பாலசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேத பரிசோதனையை விடியோ பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அரசு சார்பில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதால், அவரது குடும்பத்தினர் சார்பில் பரிந்துரை செய்யும் மருத்துவர் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டிய தேவையில்லை என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். மேலும் வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து அவர்கள் உத்தரவிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.