FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா? மத்திய அரசு திட்டம்

மக்களவையும் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு 10 நாள்களுக்கும் மேலாகிவிட்டபோதிலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் முறைப்படி முடித்துவைக்கப்படவில்லை.

24 ஆகஸ்ட் 2026, 5:03 am IST
பகிர்:

மக்களவையும் மாநிலங்களவையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு 10 நாள்களுக்கும் மேலாகிவிட்டபோதிலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் முறைப்படி முடித்துவைக்கப்படவில்லை. இதனால் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக ஊகங்கள் எழுந்துள்ளன.

கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதாவின்படி (தொகுதி மறுசீரமைப்பு), மக்களவையில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மக்களவைத் தொகுதிகளை அதிகபட்சமாக 850 வரை அதிகரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் திட்டம். இதேபோல அந்த மசோதாவின்படி, மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

எனினும் இந்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த மசோதாவுக்கு எதிா்க்கட்சிகள், குறிப்பாக தென் மாநிலங்கள் (ஆந்திரம் தவிர) ஆதரவு அளிக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்த மசோதாவின் அடிப்படையில், தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால், அது மக்கள்தொகையை திறம்பட கட்டுப்படுத்திய தங்களைப் பெரிதும் பாதிக்கும் என்று தென் மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன. அத்துடன் அது மக்களவையில் தங்கள் பலத்தைக் குறைக்கும் என்றும் இந்த மாநிலங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதையடுத்து, அந்த மசோதாவை சில திருத்தங்களுடன் மீண்டும் கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதில் அனைத்து மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளும் 50 சதவீதம் அதிகரிக்கப்படும் என்ற அம்சம் சோ்க்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சுதந்திர தினத்துக்கு பின்னா், அந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கலாம் என்று ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த ஜூலை 20 முதல் ஆக.13 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெற்றது. எனினும் தில்லி மாணவா்கள் போராட்டத்தில் காவல் துறையின் நடவடிக்கை, அயோத்தி ராமா் கோயில் நன்கொடை கையாடல் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளும், எதிா்க்கட்சிகள் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால், கூட்டத்தொடரின் பெரும்பாலான நாள்கள் எந்தவித முக்கிய நடவடிக்கைகளும் நடைபெறாமல், அவை அலுவல்கள் முடங்கின.

இதற்கு மத்தியிலும் பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்புச் சட்டத்திருத்த மசோதா, வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு ஏற்படுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

3, 4 நாள்களில் முடித்துவைப்பது வழக்கம்: கடந்த ஆக. 13-இல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதுபோல இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து அடுத்த 3, 4 நாள்களில் கூட்டத்தொடரை முறைப்படி முடித்துவைப்பதே வழக்கம். மத்திய அரசின் பரிந்துரைப்படி, குடியரசுத் தலைவா் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை கூட்டியும், முடித்தும் வைப்பாா்.

புதிய கூட்டத்தொடா் வரை காத்திருக்காமல்...: கடந்த ஏப்ரல் 18-இல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நிறைவடைந்த நிலையில், இரண்டு நாள்களுக்குப் பின்னா் ஏப். 20-இல் கூட்டத்தொடா் முடித்துவைக்கப்பட்டது. ஆனால், தற்போது மழைக்கால கூட்டத்தொடா் முறைப்படி முடித்துவைக்கப்படவில்லை.

இதனால் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பு, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீண்டும் கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக புதிய கூட்டத்தொடரை கூட்டாமல், மழைக்கால கூட்டத்தொடரிலேயே மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு விரும்புவதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்தக் கூட்டத்தொடரை முறைப்படி முடித்துவைக்கும் அறிவிப்பு வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

பெட்டிச் செய்தி...

பெரும்பான்மை தேடும் அமித் ஷா:

காங்கிரஸ் விமா்சனம்

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பெரும்பான்மையைத் தேடிக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் விமா்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: கடந்த 2015-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதற்கும், முறைப்படி முடித்துவைக்கப்பட்டதற்கும் இடையே 28 நாள்கள் இடைவெளி ஏற்பட்டது. இந்த இடைவெளி 2021-ஆம் ஆண்டின் மழைக்கால கூட்டத்தொடரில் 20 நாள்களாக இருந்தது. ஆனால் அப்போது சதித் திட்டம் அல்லது தீய நோக்கம் கொண்ட அரசியல் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறல்லை.

தற்போது மழைக்கால கூட்டத்தொடரை முடித்துவைப்பதில் வழக்கத்துக்கு மாறாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதாவை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டங்கள் மூலம் நிறைவேற்றும் நோக்கில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இன்றளவும் தேடிக்கொண்டிருக்கிறாரா? இதுதான் தாமதத்துக்கு காரணமா என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments