தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் விதிகளுக்கு உள்பட்டு கட்டப்பட்டுள்ளதா,
ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் விதிகளுக்கு உள்பட்டு கட்டப்பட்டுள்ளதா, மாணவர்களுக்கான பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்து, கடந்த சில தினங்களாக அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிபிஎஸ்இ, மெட்ரிகுலேசன், நர்சரி பள்ளிகள் என மொத்தம் 931 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் படி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள 931 தனியார் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், அரசுத் துறை அதிகாரிகள் கொண்ட 39 குழுக்கள்
நியமிக்கப்பட்டுள்ளன.
இக்குழுவில், வருவாய், மின்சாரம், பொதுப்பணித் துறை, சுகாதாரம், பள்ளிக் கல்வி, தீத்தடுப்புத் துறை மற்றும் சிஎம்டிஏ ஆகிய துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் தனியார் பள்ளிகளில் உள்ள கட்டடங்களின் உள்கட்டமைப்பு, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்ப உள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அரசு அதிகாரிகள் கடந்த சில தினங்களாக ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதன்கிழமை ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்குள்பட்ட சோமங்கலம், படப்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் பரந்தூர் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி தலைமையில், வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலையில் அரசுத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.