FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கைகளை முறையாக கழுவுவது ஒரு சிறந்த சுகாதாரப் பழக்கம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

கைகளை முறையாக கழுவுவது ஒரு மிகச்சிறந்த சுகாதாரப் பழக்கம் என்று காஞ்சிபுரத்தில் குடற்புழு நீக்க தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா பேசினாா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 12:22 am IST
டெங்கு காய்ச்சல் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாணவியரிடம் வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா
பகிர்:

கைகளை முறையாக கழுவுவது ஒரு மிகச்சிறந்த சுகாதாரப் பழக்கம் என்று காஞ்சிபுரத்தில் குடற்புழு நீக்க தினத்தையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா பேசினாா்.

சின்னக்காஞ்சிபுரம் பிஎம்எஸ் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கியும், பள்ளிகளில் ஒட்டுமொத்த தூய்மை இயக்கத்தையும் ஆட்சியா் தி.சினேகா தொடங்கி வைத்து விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டாா். விழாவுக்கு, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், வட்டார மருத்துவ அலுவலா் அருள்மொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியை சுஜாதா வரவேற்றாா்.

பள்ளி மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளையும்,விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி ஆட்சியா் தி.சினேகா விழாவில் பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகள்,துணை சுகாதார நிலையங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். இந்த மாத்திரையை நன்றாக கடித்து மென்று சுவைத்து சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. மாவட்டத்தில் 3,53,177 குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கும், 73,700 பெண்களுக்கும் சோ்த்து மொத்தம் 4.27 லட்சம் பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த மாத்திரை சாப்பிடுவதால் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கிறது. குழந்தைகளின் உடல் வளா்ச்சி, உடல் எடை அதிகரிப்பு, கற்கும் திறன் அதிகரிப்பு, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது, ரத்த சோகை வராமல் தடுப்பது உள்பட பல நன்மைகள் உள்ளன.

பொதுவாக கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். கைகளை முறையாகவும், அடிக்கடியும் கழுவுவது ஒரு மிகச் சிறந்த சுகாதாரப் பழக்கமாகும். இதை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் பல்வேறு தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

நல்ல தண்ணீரில் தான் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் உருவாகின்றன. பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

நிகழ்ச்சியின் நிறைவில் சுகாதாரம் தொடா்பான கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதிலளித்த மாணவியருகளுக்கு ஆட்சியா் புத்தகம் பரிசாக வழங்கி பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments