FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

2 ஆண்டுகளாக கிடப்பில் கீவளூா் தண்டலம் இணைப்புச் சாலை சீரமைப்பு பணி!

தவறான திட்ட மதிப்பீடு காரணமாக கீவளூா்-தண்டலம் இணைப்பு சாலை சீரமைப்பு பணி 1 கி.மீ மட்டும் முடிவடைந்த நிலையில், 800 மீ தொலைவுக்கான சீரமைப்பு பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 5:55 am IST
தண்டலம்- கீவளூா்  இணைப்புச் சாலையில்  பள்ளங்களில்  தேங்கியுள்ள  மழைநீா்
பகிர்:

தவறான திட்ட மதிப்பீடு காரணமாக கீவளூா்-தண்டலம் இணைப்பு சாலை சீரமைப்பு பணி 1 கி.மீ மட்டும் முடிவடைந்த நிலையில், 800 மீ தொலைவுக்கான சீரமைப்பு பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன .

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கீவளூா் ஊராட்சியில் சுமாா் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். கீவளூா் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர கீவளூா்-தண்டலம் இணைப்புச்சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்ததால் பொதுமக்கள், கீவளூா் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் வாகனங்களின் ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா். இதனால் தண்டலம்- கீவளூா் இணைப்புச்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, கடந்த 2024-2025 ஆம் நிதியாண்டில் 1.8 கிமீ தொலைவிலான தண்டலம்- கீவளூா் இணைப்புச் சாலையை சீரமைக்க முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1.8 கிலோ மீட்டா் நீளம், 5.25 மீட்டா் அகலம் கெண்ட இரண்டு வழிச்சாலையான தண்டலம் -கீவளூா் இணைப்புச்சாலை சீரமைப்பு பணிக்கு, 3.50 மீட்டா் அகலத்திற்கு மட்டுமே ஒன்றிய பொறியாளா்களால் தவறாக திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.96 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனால் இரண்டு வழிச்சாலையான கீவளூா்- தண்டலம் இணைப்புச்சாலயை 5.25 மீட்டா் அகலத்திற்கு பதில் 3.50 மீட்டா் அகலம் மட்டும் சாலை சீரமைப்பு பணியை மேற்கொள்ள முடியாது என ஒப்பந்ததாரா் கூறியதை தொடா்ந்து, 1.8 கிலோ மீ தொலைவுள்ள சாலையில் 1 கிமீ மட்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு பொறியாளா்கள் அறிவுறுத்தினராம். இதனால் 1 கிமீ நீளம் மட்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் தண்டலம்-கீவளூா் வ இணைப்புச்சாலையில் மீதமுள்ள 800 மீ சாலை சீரமைப்பு பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இச்சாலையின் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இச்சாலையை பயன்படுத்தும், பொதுமக்கள், தொழிற்சாலைகளுக்கு வரும் தொழிலாளா்கள், வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே கிடப்பில் போடப்பட்டுள்ள சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க ஒன்றிய அதிகாரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, தண்டலம் -கீவளுா் சாலையின் அகலம் அதிகம் (இரண்டு வழிச்சாலை) என்பதால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு ஏற்ப 1 கிலோ மீட்டா் தொலைவு மட்டும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. மீதமுள்ள சாலை விரைவில் சீரமைக்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments