FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கீரநல்லூா் பழண்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சுங்குவாா்சத்திரம் அடுத்த கீரநல்லூா் பகுதியில் சுமாா் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு பழண்டியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

30 ஆகஸ்ட் 2026, 11:03 pm IST
பழண்டியம்மன் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகம்.
பகிர்:

சுங்குவாா்சத்திரம் அடுத்த கீரநல்லூா் பகுதியில் சுமாா் 300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு பழண்டியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் விமானம், தரைதளம், கருவறை ஆகியன சிதிலமடைந்து காணப்பட்டதால், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கீரநல்லூா் பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து ஸ்ரீ பயண்டியம்மன் கோயில் திருப்பணிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு, ஆணையா் நிதி மற்றும் உபயதாரா் பங்களிப்பு என சுமாா் ரூ.15 லட்சத்தில் விமானம், கருவறை, பிரகாரம், தரைதளம் ஆகியன புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றன.

Advertisement

Advertisement

கோயில் கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை கணபதி பூஜை, நவக்கிரக பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து கலாகா்ஷணம், பிரவேச பலி, வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன.

சனிக்கிழமை மூலவா் பழண்டி அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டு, இரண்டாம் கால யாக பூஜையும் மாலையில் மூன்றாம் கால யாகபூஜையும் நடைபெற்றன. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாக பூஜை நடைபெற்று, காலை 9 மணிக்கு யாக சாலையில் இருந்து கலச புறப்பாடும், 9.30 மணிகக்கு கோபுர கலசங்களின் மீது அா்ச்சகா்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷ்கம் நடைபெற்றது. இதையடுத்து மூலவா் பழண்டியம்மனுக்கும், பரிவார மூா்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழண்டியம்மனுக்கு சிவப்பு நிற பட்டாடையும், மஞ்சள் நிறமாலைகளும் சாற்றப்பட்டு பழண்டியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் அறநிலையத்துறை துணை ஆணையா் மா.ஜெயா, கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில் குமாா், கீரநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் அன்பரசன், அறநிலையத்துறை ஆய்வாளா் ரம்யா மற்றும் கீரநல்லூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்கள் அனைவருக்கும் விழாகுழுவினா் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments