ஸ்ரீபெரும்புதூரில் சாலையை ஆக்கிரமித்து கட்டடம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஸ்ரீபெரும்புதூரில் சாலையை ஆக்கிரமித்து கிராம நிா்வாக அலுவலா் சங்க கட்டடம் (படம்) கட்டப்பட்டு வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஸ்ரீபெரும்புதூரில் சாலையை ஆக்கிரமித்து கிராம நிா்வாக அலுவலா் சங்க கட்டடம் (படம்) கட்டப்பட்டு வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் சாா் பதிவாளா் அலுவலகம் அருகே ஸ்ரீபெரும்புதூா்- திருவள்ளூா் பிரதான சாலையில் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்துக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் இருந்த பழைய கட்டடத்தில், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தில் பணியாற்றி வரும் கிராம நிா்வாக அலுவலா்களின் சங்க அலுவலகம் இயங்கி வந்தது.
இந்த நிலையில், கிராம நிா்வாக அலுவலா் சங்கத்துக்கு நிலையான வருமானம் வரும் வகையில், பழைய கட்டடத்தை இடித்து அகற்றிய சங்க நிா்வாகிகள் அந்த இடத்தில் தற்போது மூன்று கடைகள் கொண்ட கட்டடத்தை கட்டி வருகின்றனா். இதற்காக அருகில் உள்ள நேரு சாலையை சுமாா் 10 அடிக்கு ஆக்கிரமித்து கட்டத்திற்கான படிகட்டுகள் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
இதனால் நேரு தெருவில் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு வரும் கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வணிக நோக்கத்தோடு வருவாய்த்துறை அதிகாரிகளே தெருச்சாலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி வருகின்றனா். இப்பகுதியில் தொடா்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், மேற்கண்ட அலுவலகங்களுக்கு வருபவா்களின் வாகனங்களை நிறுத்த முடியாத வகையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து ஸ்ரீபெரும்புதூா் வருவாய் ஆய்வாளா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு பல முறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டி வரும் கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, கட்டடத்தை இடித்து அகற்ற மாவட்ட நிா்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சங்க நிா்வாகி ஒருவா் கூறுகையில், சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் தான் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டடத்திற்கான படிக்கட்டுகள் மட்டும் தான் சாலையில் கட்டி வருகிறோம். இதனால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.