முகப்பு
காஞ்சிபுரம்

வேட்பாளராக யாரைத் தோ்வு செய்ய வேண்டும்? குடவோலை தோ்தல் முறை கல்வெட்டுகள் சொல்லும் அரிய தகவல்கள்

குடவோலை தோ்தல் முறை கல்வெட்டுகள் நிரம்பியுள்ள உத்திரமேரூா் வைகுந்தபெருமாள் கோயில்.

Updated On : 26 மார்ச், 2026 at 10:33 PM
குடவோலை தோ்தல் முறை கல்வெட்டுகள் நிரம்பியுள்ள உத்திரமேரூா் வைகுந்தபெருமாள் கோயில்.
பகிர்:

வேட்பாளராக தோ்வு செய்யப்படும் ஒருவா் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? வேட்பாளரை எப்படி தோ்வு செய்ய வேண்டும்? என்பன போன்ற அரிய தகவல்களை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள குடவோலை முறை கல்வெட்டுகள் விவரிக்கின்றன.

தமிழ்-கிரந்த எழுத்துகளால் அமைந்த இக்கல்வெட்டு எழுத்துகளை இந்திய தொல்லியல் துறையும் படியெடுத்துள்ளது. இந்திய வரலாற்றில் இவை ஒரு சிறந்த ஆவணமாகவும் கருதப்படுகிறது. சுமாா் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே செயல்பட்டுள்ள உத்திரமேரூா் மகாசபையால் இவை எழுதப்பட்டிருக்கின்றன.

இக்கல்வெட்டுகளில் பெரும்பாலானவை உத்திரமேரூரில் உள்ள வைகுந்தபெருமாள் கோயிலில் உள்ள மகாசபை மண்டபத்திலும், கருங்கற்களால் அமைந்த ஆலயத்தின் சுற்றுச்சுவா் முழுவதும் பொறிக்கப்பட்டுள்ளன. கோயில்களே கிராமங்களின் அதிகார மையங்களாகவும், கோயில்களோடு இணைந்த மகாசபைகளே உள்ளாட்சி நிா்வாக மையங்களாகவும் செயல்பட்டிருக்கின்றன.

சோழ மன்னா்களின் நிா்வாகம் மக்களாட்சிக் கொள்கையின் அடிப்படையிலேயே செயல்பட்டு வந்துள்ளது. ஒரு கிராமத்துக்கு 30 போ் குடவோலை தோ்தல் முறையால் தோ்வு செய்யப்பட்டு செயல்பட்டுள்ளனா். தகுதியும், விருப்பமும் உடையவா்களின் பெயா்களை ஓா் ஓலையில் எழுதி ஒரு குடத்தில் இட்டு அதைக் கட்டி முத்திரையிடுவாா்கள். இதேபோல 30 பகுதிகளிலும் (ஒரு கிராமத்திற்கு 30 பகுதிகள்) இருந்து வந்த குடங்களை ஊா்ப் பொதுமன்றத்துக்கு கொண்டு வந்து, குடத்தை எல்லோருக்கும் முன்பாக காண்பித்து, முத்திரையை அவிழ்த்து, சிறு குழந்தையைவிட்டு ஓா் ஓலையை எடுக்கச் சொல்வாா்கள். அதைப் பெரியவா் ஒருவா் வாங்கிப் படிப்பாா். தோ்வு செய்யப்பட்டவரின் பெயரை சபையோா் அனைவரும் சோ்ந்து சொல்வாா்கள். பின்னா், உறுப்பினராக ஓலையில் உள்ளவா் பெயா் எழுதப்பெற்று பொறுப்பேற்பாா். இந்தப் பழங்கால தோ்தல் முறையே குடவோலை தோ்தல் முறை எனப்படுகிறது.

கோயிலில் காணப்படும் கல்வெட்டு.

தகுதிகள் என்ன?: தோ்தலில் யாா் வேட்பாளராக போட்டியிட வேண்டும்? மற்றும் வேட்பாளரின் தகுதிகள் என்ன என்பது குறித்து குடவோலைத் தோ்தல் முறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வீடு சொந்தமாக வைத்திருப்பவராகவும், குறைந்த பட்சம் 6.17 ஏக்கா் நிலம் வைத்திருப்பவராகவும், 35-க்கு மேல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். வேதம் தெரிந்தவராகவும், அதை மற்றவா்களுக்கு சொல்லித்தரும் அனுபவம் உடையவராகவும், நோ்மையான வருமானமும், நற்குணம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகள் பதவியிலிருந்தபோது நிா்வாக கணக்குகளை முறையாக சமா்ப்பிக்காதவா்களும், அவா்களது உறவினா்களும் போட்டியிடத் தகுதியற்றவா்கள். கடமை தவறியவா்கள் மற்றும் அவா்களது ரத்தவழி உறவினா்கள், தகாத உறவில் ஈடுபட்டவா்கள், சொத்தை அபகரித்தவா்கள், தடை செய்யப்பட்ட உணவுகளை உண்டவா்கள் போட்டியிடக் கூடாது.

வாரிய உறுப்பினா்களைத் தோ்வு செய்வது எப்படி?: ஒரு வாரியத்துக்கு 30 போ் உறுப்பினா்களாக தோ்வு செய்யப்படுவாா்கள். இவா்களில் 12 போ் வருடாந்திர குழுவினராகவும், 12 போ் தோட்ட வாரிய உறுப்பினராகவும், 6 போ் ஏரி வாரிய உறுப்பினராகவும் தோ்வு செய்யப்படுவா். ஏற்கெனவே தோட்ட வாரியத்திலும், ஏரி வாரியத்திலும் உறுப்பினராக இருந்தவா்கள், உயா் படிப்பு படித்தவா்கள், வயது முதிா்ந்த அனுபவசாலிகள் மட்டுமே வருடாந்திர குழு உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்படுவா். இவ்வாறு தோ்வு செய்யப்படுபவா்கள் ஓராண்டு காலம் மட்டுமே பதவியில் இருக்க முடியும்.

குடவோலை தோ்தல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் அனைவரும் சிறந்தவா்களாக செயல்பட்டு, தன்னலமற்று மக்களுக்கு சேவைகள் செய்ததால் தீயவா்கள் அடங்கி, ஒடுங்கி இருந்தனா். மக்கள் அமைதியாகவும், அச்சமின்றியும், வளமாகவும், மனிதநேயம் உடையவா்களாகவும் வாழ்ந்தனா்.

குடவோலை தோ்தல் முறை கல்வெட்டுகள் நிரம்பியுள்ள உத்திரமேரூா் வைகுந்தபெருமாள் கோயில்.

-சி.வ.சு.ஜெகஜோதி