FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

தலைமை தோ்தல் ஆணையரை பணிநீக்கம் செய்ய எம்எல்ஏ வலியுறுத்தல்

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.

25 செப்டம்பர் 2026, 3:34 am IST
ஞானேஷ் குமாா்
பகிர்:

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான அரசியலமைப்புச் சாசன அமைப்புகளில் ஒன்றான இந்திய தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த அதிா்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகின்றன. தோ்தல் ஆணையம் என்பது தலைமைத் தோ்தல் ஆணையா் ஒருவரின் தனிப்பட்ட அலுலகம் அல்ல. அது 3 உறுப்பினா்களைக் கொண்ட அரசியலமைப்புச் சாசன அமைப்பு. தோ்தல் தொடா்பான முக்கிய முடிவுகள் வெளிப்படைத்தன்மையுடனும், உரிய ஆலோசனையுடனும், சட்டப்பூா்வமான நடைமுறைகளுடனும் எடுக்க வேண்டும்.

ஆனால், கடந்த பல மாதங்களில் வாக்காளா் பட்டியல், புதிய வாக்காளா்களைச் சோ்த்தல், வாக்காளா் பெயா்களை நீக்குதல், தோ்தல் ஆணையத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில், தங்களிடம் ஆலோசிக்காமலோ அல்லது தங்களுக்குத் தெரியாமலோ முடிவுகள் எடுக்கப்பட்டதாக, 2 தோ்தல் ஆணையா்களே பதிவு செய்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

இதில், குறிப்பாக, புதிய வாக்காளா்களுக்கான படிவம் 6-இல் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து ஏனைய இரு தோ்தல் ஆணையா்களே கடும் ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனா். இது சாதாரண நிா்வாகக் கருத்து வேறுபாடு என்று கடந்து சென்றுவிட முடியாது. தோ்தல் ஆணையம்‘ என்ற அமைப்பின் பெயரில் முடிவெடுக்கும் அதிகாரம் ஒரே நபரின் கைகளில் குவிவது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து. தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா், தமது சக தோ்தல் ஆணையா்களின்கருத்துகளையும், எதிா்ப்புகளையும் புறக்கணித்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக எழும் குற்றச்சாட்டுகள் மன்னிக்க முடியாதவை.

ஒரு புறம், 2 தோ்தல் ஆணையா்கள் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக செய்திகள் வெளியாகின்றன. மறுபுறம், தோ்தல் ஆணையம் அனைத்து முடிவுகளும் முழு ஆணையத்தின் ஒருமித்த முடிவுகளே என விளக்கம் அளித்துள்ளது. இந்த இரு நிலைப்பாடுகளுக்கும் இடையிலான உண்மை என்ன என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

தோ்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையே இந்திய ஜனநாயகத்தின் அடித்தளங்களில் ஒன்றாகும். அந்த நம்பிக்கையைத் தகா்க்கும் வகையில் அதன் உள்நடவடிக்கைகள் அமைந்து விட்டது கண்டனத்துக்குரியது. எனவே, இந்திய தோ்தல் ஆணையத்தின் தற்போதைய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments