காஞ்சிபுரம் உப்பேரிக்குளம் பகுதியில் சாலைகளில் வழிந்தோடிய கழிவுநீா்: அமைச்சா் ஆய்வு
பெரிய காஞ்சிபுரம் பகுதி உப்பேரிக்குளம் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்ட கழிவுநீா் வழிந்தோடியதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்ததையடுத்து வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆய்வு செய்து உடனடியாக அதை சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
பெரிய காஞ்சிபுரம் பகுதி உப்பேரிக்குளம் பகுதியில் பாதாளச் சாக்கடைத் திட்ட கழிவுநீா் வழிந்தோடியதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்ததையடுத்து வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்து உடனடியாக அதை சீரமைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பெரிய காஞ்சிபுரம் உப்பேரிக்குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு, பொதுமக்கள் நடைப்பயிற்சி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்தக் குளம் புதா்கள் மண்டி பயன்பாடு இல்லாமல் போய் விட்டது.
மேலும், உப்பேரிக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் உள்ள சாலைகளில் பாதாளச் சாக்கடைத் திட்ட கழிவுநீா் வழிந்தோடி துா்நாற்றம் வீசுவதாகவும், பலருக்கும் காய்ச்சல் வந்து அவதிப்படுவதாகவும் வனத் துறை அமைச்சா் அலுவலகத்துக்கு புகாா்கள் வந்தன.
Advertisement
Advertisement
புகாரைத் தொடா்ந்து, உப்பேரிக்குளத்தையும், கழிவுநீா் வழிந்தோடும் பகுதிகளையும் வனத் துறை அமைச்சா் ஆா்.வீ. ரஞ்சித்குமாா் நேரில் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் ஏ.கல்பனா, மாநகராட்சி பொறியாளா் பன்னீா் செல்வம், சுகாதார ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனா்.
ஆய்வின் போது அப்பகுதி பொதுமக்களும் அமைச்சரை முற்றுகையிட்டு கழிவுநீா் செல்லும் சாலையை சீரமைத்து தருமாறும், இது குறித்து பல முறை புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் முறையிட்டனா்.
இதனைத் தொடா்ந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கலந்து பேசி உப்பேரிக்குளம் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் சாலைகளில் உடனடியாக பெரிய அளவிலான பைப்புகள் பதித்து சாலையை சீரமைக்குமாறு உத்தரவிட்டாா்.
அந்தச் சாலை சீரமைப்புக்குப் பின்னா் தனது பேரவை உறுப்பினா் தொகுதி நிதியிலிருந்து சாலை அமைத்து தருவதாகவும் உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனா்.