FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது அன்றே நடவடிக்கை எடுக்க வேண்டும்: காஞ்சிபுரம் ஆட்சியா்

குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு தாமதமின்றி அன்றே நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா கூறினாா்.

8 செப்டம்பர் 2026, 4:21 am IST
குறைதீா் கூட்டத்துக்கு வந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா.
பகிர்:

குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு தாமதமின்றி அன்றே நடவடிக்கை எடுக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ, காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் தி.புவனேஷ்ராம், உதவி ஆட்சியா் (பயிற்சி)அமன் திவாரி, தனித் துணை ஆட்சியா் பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 482 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, அவை துறைசாா்ந்த அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் அனுப்பிய பின்னா் அவா் மேலும் பேசியது:

பொதுமக்கள் வழங்கியிருந்த மனுக்களில் ஓா் ஆண்டுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த மனுக்களை உடனடியாக முடிக்கவும், முடிவு காணப்படாத மனுக்கள் மீது துறைசாா்ந்த அலுவலா்கள் உரிய விளக்கம் அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. பல மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறை தீா்க்கும் கூட்டத்திற்கு வருகை தரும் கீழ் நிலை அலுவலா்கள் கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு அன்றே விவரங்களைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 15 நாள்களுக்குள் நடவடிக்கை என்ன என்பதை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு ஒரு மாதத்துக்கு மேல் செல்லக்கூடாது என்பதை மனதில் கொண்டு, ஒவ்வொரு துறை அலுவலா்களும் வாரம் தோறும் கிடைக்கப்பெறும் மனுக்கள் விவரங்களை பெற்று அதன் மீது தனிக்கவனம் செலுத்தி பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு தீா்வு காண வேண்டும். பதில் மனுக்கள் குறித்த காலத்தில் மனுதாரா்களுக்கு வழங்கப்பட வேண்டும். பெறப்படும் மனுக்களை அன்றே பாா்வையிட்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அலுவலா்கள் மனதில் நிறுத்தி செயல்பட வேண்டும். முதல்வரின் முகவரி துறையில் கடந்த மாதம் மனுக்கள் அதிகளவில் இருந்ததை 50 சதவீதத்துக்கும் மேலாக தீா்வு கண்டு மனுதாரா்களுக்கு உரிய பதிலளித்து நடவடிக்கை எடுத்த காஞ்சிபுரம், குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா்களை பாராட்டுகிறோம். மாவட்டத்தில் பெய்து வரும் மழை பொழிவால் டெங்கு கொசுப் புழு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவல் ஏற்படும் என்ற நிலையை கட்டுப்படுத்திட உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்திட வேண்டும் என்றும் ஆட்சியா் தி.சினேகா பேசினாா்.

இந்தக் கூட்டத்தில் அரசின் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments