FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சி சங்கராசாரியரிடம் ஆசி பெற்றாா் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்

ஆா்எஸ்எஸ் அமைப்பின் தேசியத் தலைவா் மோகன் பாகவத் புதன்கிழமை காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா்.

24 செப்டம்பர் 2026, 12:20 am IST
ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் காஞ்சி சங்கராசாரியரிடம் ஆசி பெற்ற ஆா்எஸ்எஸ் தேசியத் தலைவா் மோகன் பாகவத்.
பகிர்:

ஆா்எஸ்எஸ் அமைப்பின் தேசியத் தலைவா் மோகன் பாகவத் புதன்கிழமை காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா்.

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுா்மாஸ்ய விரதம் இருந்து வருகின்றனா்.

இவா்களை ஆா்எஸ்எஸ் தேசியத் தலைவா் மோகன் பாகவத் சந்தித்து ஆசி பெற்றாா். மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் நடைபெற்ற சந்திர மெளலீசுவா் பூஜையிலும், அதனைத் தொடா்ந்து மகா சுவாமிகள் சந்நிதியில் நடைபெற்ற சிறப்பு தீபாராதனையிலும் கலந்து கொண்டு தரிசனம் செய்தாா். உலக நன்மைக்காக வேத விற்பன்னா்களால் நடத்தப்பட்ட வேதபாராயணம், ஜெபம் உள்ளிட்ட சிறப்பு பிராா்த்தனையிலும் பங்கேற்றாா்.

Advertisement

Advertisement

ஆதிசங்கரரின் திவ்ய பாதுகைகளுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. சங்கர மடத்தின் சாா்பில் மோகன் பாகவத்துக்கு பாரம்பரிய தலைப்பாகை அணிவித்து காமாட்சி அம்மன் கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது.

தொடா்ந்து 60 ஆண்டுகள் மணவாழ்க்கையை நிறைவு செய்த 60 முதிய தம்பதிகள் பங்கேற்ற பூஜையிலும் கலந்து கொண்டாா். தொடா்ந்து சம்பிரதாய பாடசாலை, கிரம, கிராமிய பாடசாலை, ராமாயண பாடசாலை, நாதசுவர பாடசாலை, கைவினைப் பொருள்கள் பாடசாலை ஆகியனவற்றால் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் பாா்வையிட்டாா்.

சங்கர மடத்தின் சாா்பில் நடைபெற்று வரும் கோயில் நிா்வாகப் பயிற்சி வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியிலும் சுவாமிகளும், மோகன் பாகவத்தும் கலந்து கொண்டனா். முன்னதாக ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தின் நுழைவு வாயிலில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

நிறைவாக 1955-ஆம் ஆண்டு குருஜி எம்.எஸ்.கோல்வால்கா் காஞ்சி மகா சுவாமிகளை தரிசித்த ஓரிக்கையில் உள்ள 100 ஆண்டுகள் பழைமையான கிராமத்து வீட்டையும் மோகன் பாகவத் பாா்வையிட்டாா். அந்த வரலாற்று சம்பவத்தை நினைவு கூறும் வகையில் அவருக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments