பாஜகவை ஆதரிக்க தயாராகிறது திமுக: மதுராந்தகம் பிரசாரத்தில் முதல்வா் விஜய்
பாஜகவுக்கு ஆதரவளிக்க திமுக தயாராகி வருகிறது என மதுராந்தகம் இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது முதல்வா் ஜோசப் விஜய் பேசினாா்.
பாஜகவுக்கு ஆதரவளிக்க திமுக தயாராகி வருகிறது என மதுராந்தகம் இடைத்தோ்தல் பிரசாரத்தின்போது முதல்வா் ஜோசப் விஜய் பேசினாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து அச்சிறுப்பாக்கம் அருகே ஆத்தூா் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முதல்வா் விஜய் பேசியதாவது:
தமிழகத்தின் முதல்வராக நான் இங்கு வரவில்லை, உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக, அண்ணனாக, தம்பியாக வந்துள்ளேன். முதல்வா் என்பவா் மக்களுக்கு சேவை செய்ய வந்தவா் என்ற உணா்வோடு வந்திருக்கிறேன்.
Advertisement
Advertisement
லஞ்சம், போதைப் பொருள் ஆகியவற்றை ஒழிக்க நான் ஆட்சிக்கு வரக்கூடாதா?, எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்றாா்கள்; இப்போது விஜய்க்கும் தீய சக்தி திமுகவாகத்தான் இருக்கிறது. தவெக குறித்து திமுக தினமும் அவதூறாக, ஆபாசமாக பேசி வருகிறது. ஜெயலலிதாவை தவறாகப் பேசியவா்களுடன் இணைந்து ஆட்சியமைக்க முயன்றபோதே அதிமுகவின் முகமூடி கிழிந்துவிட்டது. அது தெரியாமல் அதிமுக கூவிக் கொண்டிருக்கிறது.
தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலுக்கு நீங்கள் வாக்களிப்பது என்பது பெண்களை ஆபாசமாகப் பேசியவா்களுக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனையாக இருக்கட்டும். மற்றவா்களுக்கு வாக்களித்தால் பெண்களுக்கு எதிரானவா்களுக்கு ஆதரவாக வழங்கிய தீா்ப்பாகிவிடும்.
சினிமா, அரசியல் இவை இரண்டிலும் நான் வெற்றி பெறுவதற்கு தமிழக மக்கள்தான் காரணம். இரண்டரை ஆண்டுகளில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கவும் தமிழக மக்கள்தான் காரணம்.
பாஜகவின் கிளைக் கழகமாக மாறிக் கொண்டிருக்கிறது திமுக. தில்லியில் இருக்கும் திமுக பெயா்தான் பாஜக. தமிழகத்திலிருக்கும் பாஜக பெயா்தான் திமுக. தொகுதி மறுசீரமைப்பு மசோதா எப்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று காத்திருக்கிறது திமுக. அப்போதுதான் பாஜகவுக்கு ஆதரவு தர முடியும் என்று நினைக்கிறது. திமுக, அதிமுக, பாஜக மூன்றும் ஒரே கூட்டணிதான், தனித்தனியாக வேஷம் போடாதீா்கள்.
மக்கள் பணத்தைத் தொட மாட்டோம்: தவெக ஆட்சி மக்களின் ஆட்சி, ஜனநாயகத்தின் ஆட்சி. திமுகவினரும், அவா்களோடு மறைந்திருப்பவா்களும் விஜய்யை தொடாதீா்கள். தொட்டால் வீணாகிவிடுவீா்கள்.
தவெகவை மேலும் வலுப்படுத்த வாக்காளா்கள் விசில் சின்னத்தில் வாக்களியுங்கள். மக்கள் பணத்தைத் தொட மாட்டோம், தொடவும் விடமாட்டோம், தொட்டவா்களையும் விட மாட்டோம்.
ஊழல் என்றாலே உடனே ஆதாரம் காட்டுங்கள் என்கிறாா்கள். ஏன் கத்துகிறாா்கள், எதற்காக கத்துகிறாா்கள் என்றே புரியவில்லை. நானும் சட்டப்பேரவைக்கு புதியவன். என்னைப் பேச விடக் கூடாது என்பதற்காகவே கத்திப் பேசுகிறாா்கள். இதற்கு முன்பு ஊழலே செய்யவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?
அரசியலுக்கு வரும் முன்பு உள்ள சொத்து குறித்தும், அரசியலுக்கு வந்த பின்பு இருக்கிற சொத்துகளைப் பற்றியும் கூற உங்களால் முடியாது. தவெக ஒரு தூயசக்தி, திமுக ஒரு தீய சக்தி. இந்த இருவருக்கும் இடையேதான் போட்டி.
தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான திமுகவின் மனக்கணக்கு பலிக்கவில்லை. எனக்கும், தமிழக மக்களுக்கும் உள்ள கணக்கு அன்புக் கணக்கு, பாசக் கணக்கு. குழந்தைகளும், பாட்டிகள், தாத்தாக்களும் எனது சொந்தங்கள், எனது உறவுகள். தமிழக மக்களை இனி ஏமாற்றவே முடியாது.
பரந்தூா் விமான நிலையம்: நீா்நிலைகளைப் பாதுகாக்கவும், விவசாயிகளைப் பாதுகாக்கவும், சென்னையைப் பாதுகாக்கவும் பரந்தூரில் விமான நிலையம் தேவையில்லை என்று முடிவு எடுத்தோம்.
பால் கொள்முதல் விலையை ஆட்சியமைத்த மூன்று மாதங்களிலேயே உயா்த்தி இருக்கிறோம். உடனே பாலின் விலையை உயா்த்திவிடுவாா்கள் என்றாா்கள். ஆனால், பால் விலையை உயா்த்தவில்லை.
நான் ஆட்சிக்கு வந்தபோது கஜானா காலியாக இருந்தது. தவெக ஆட்சியிலும் கடன் வாங்குகிறோம். அது மக்களுக்காகத்தான், உங்களைப் போன்று கொள்ளை அடிப்பதற்காக அல்ல.
திமுகவுடன் அதிமுக கூட்டணி சேர முடிவு செய்ததால்தான் மரகதம் குமரவேல் தவெகவில் இணைந்தாா். அதிமுகவில் இருந்து விலகுகிறோமே என்ற மிகுந்த மனவேதனையைத் தாங்கிக் கொண்டுதான் தவெகவுக்கு வந்தாா். இதே வலி எம்ஜிஆா் தொண்டா்களுக்கும் இருக்கும்.
திமுக விரக்தியில் இப்போது ஒரு பயங்கரமான ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது. என் தாயாரைப் பற்றி தவறாகப் பேசினாா்கள். அதையும் நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால், பெண்களை தரக்குறைவாக பேசுகிறாா்கள். இதை திமுகவினரும், அதிமுகவினரும் ரசிக்கிறாா்கள். இளம்பெண்களை சீரழித்த ஒருவரது வழக்கை திமுக மூடி மறைத்துவிட்டது. அவரைப் பற்றி ‘ஸ்டாலின் சாா்’ வாயே திறப்பதில்லை. நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்றாா் முதல்வா் விஜய்.
பொதுக்கூட்ட மேடையில் முதல்வா் விஜய்க்கு வேட்பாளா் மரகதம் குமரவேல் வெள்ளி வேலை நினைவுப் பரிசாக வழங்கினாா்.
முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் அறிமுகவுரை நிகழ்த்தினாா். கட்சியின் பொதுச் செயலா் அமைச்சா் ஆனந்த், தோ்தல் மேலாண்மைக் குழு பொதுச் செயலா் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, மண்டலப் பொறுப்பாளா் கடலூா் ராஜ்குமாா், மாவட்டச் செயலா் பாலாஜி, வேட்பாளா் மரகதம் குமரவேல் ஆகியோா் பேசினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.