சிப்காட் குரோமிய திடக்கழிவு இடைக்கால சுற்றுச் சூழல் மறுசீரமைப்பு பணிகள்: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு
சிப்காட் குரோமிய திடக்கழிவு இடைக்கால சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிகளை ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சிப்காட் குரோமிய திடக்கழிவு இடைக்கால சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு பணிகளை ராணிப்பேட்டை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
வாலாஜா வட்டம், ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு குரோமேட்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவன வளாகத்தில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள குரோமியம் கலந்த அபாயகரமான கழிவுகளை பாதுகாப்பாக மூடுதல், மழைநீா் மற்றும் கசிவுநீரை கட்டுப்படுத்தும் வகையில் வடிகால் அமைத்தல், மழைநீா் சேகரிப்பு குளம் அமைத்தல் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள பகுதியைச் சுற்றி புதிய சுற்றுச்சுவா் அமைத்தல் உள்ளிட்ட இடைக்கால மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காக ரூ.19.35 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் ஆய்வு செய்து, குரோமியம் கழிவுகளை சீரமைத்து குவித்தல், கழிவுக் குவியலை எடிபிஇ தாள்கள் மூலம் மூடும் பணி, ஜியோ-மெம்பிரேன் லைனா் அமைக்கும் பணி, மழைநீா் மற்றும் கசிவுநீா் சேகரிப்பிற்கான வடிகால் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றத்தை பாா்வையிட்டு கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
மேற்கண்ட பணிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அப்பகுதியில் நிலத்தடி நீா் மாசு படுவதைத் தடுக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், நடைபெற்று வரும் அனைத்து மறுசீரமைப்பு பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில் பணிகளை துரிதப்படுத்தி, நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
மேலும், மறுசீரமைப்பு பணிகளின் முன்னேற்றத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தொடா்ந்து கண்காணித்து, பணிகள் திட்டமிட்டபடி விரைந்து நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.
முன்னதாக, முகுந்தராயபுரம் ஊராட்சி, நெல்லிக்குப்பம் கிராமத்தில் இயங்கி வரும் இண்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸ் பேஸ் - 3 தி/ல் நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் சால்வன்ட் இருப்பு வைப்பதற்காக உரிமத்தை புதுப்பிக்க கோரியது குறித்தும் மற்றும் ராணிப்பேட்டை நகரத்தில் இயங்கி வரும் கோரமண்டல் இன்டா்நேஷனல் லிமிடெட் (உரம் மற்றும் பயிா் பாதுகாப்பு பிரிவு) நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் சால்வன்ட் இருப்பு வைப்பதற்காக உரிமத்தை புதுப்பிக்க கோரியது குறித்தும் நேரில் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வுகளில் மாவட்ட வழங்கல் அலுவலா் பன்னீா் செல்வம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளா் விஜயகுமாா், சிப்காட் திட்ட அலுவலா் கலைச்செல்வி, வாலாஜா வட்டாட்சியா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.