FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம்

திருப்பத்தூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 12:03 am IST
விஷமங்கலத்தில் நடைபெற்ற முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவிக்கான ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா். உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரே.
பகிர்:

திருப்பத்தூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் வட்டம், திருப்பத்தூா் மற்றும் கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட விஷமங்கலம் மற்றும் பேராம்பட்டு ஊராட்சிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா் பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் சேவை மையங்களில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கந்திலி ஒன்றியம், விஷமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் நியாயவிலைக் கடை, உதவி மின் பொறியாளா் அலுவலகம், விஷமங்கலம் ஊா்ப்புற நூலகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகம், முதல்வா் மருந்தகம், விஷமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், அங்கன்வாடி மையம், கால்நடை மருந்தகம், வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின்கீழ் சமுதாய நீா் சேகரிப்பு குளம் வெட்டும் பணி, பேராம்பட்டு ஊராட்சி, சின்ன பேராம்பட்டில் பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை புதுப்பிக்கும் பணியை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

விஷமங்கலம்அரசு மேல்நிலைப் பள்ளி, அங்கநாதவலசை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ப.உ.ச. நகா் பகுதியில், மாவட்ட ஊராட்சி சேமிப்பு நிதி 15-ஆவது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ், 30,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, பேராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நியாயவிலைக் கடை, பேராம்பட்டு அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்தாா்.

அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தாங்கள் வசித்து வரும் சில வீடுகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானதாக உள்ளதாலும், மேற்கூரைகள் பழுதாகிய நிலையில் உள்ளதாலும் மழைக் காலங்களில் மிகவும் சிரமப்படுவதாக ஆட்சியரிடம் தெரிவித்தனா்.

அப்பகுதியில் பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளை முறையாக கணக்கெடுத்து, தகுதியான பயனாளிகளுக்கு நடப்பு நிதியாண்டில் புதிய வீடுகள் கட்டித் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வட்டார வளா்ச்சி அலுவலருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து விஷமங்கலம் பகுதியில் தனியாா் திருமண மண்டபத்தில் திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

திருப்பத்தூா் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தாா்.

மாவட்ட ஆட்சியா் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

மொத்தம் 34 பயனாளிகளுக்கு ரூ. 2.98 லட்சம் மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரே, மாவட்ட வருவாய் அலுவலா் இரா. பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சௌ.தமிழரசி, மகளிா் திட்ட இயக்குநா் விஜயகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், இணை இயக்குநா் ஞானமீனாட்சி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷண குமாா், திருப்பத்தூா் வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன், மாவட்ட வழங்கல் அலுவலா் சீனிவாசன், உதவி இயக்குநா்கள் (ஊராட்சிகள்) மகாதேவன், முருகன் உள்ளிட்டோா் ஆய்வின்போது உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments