FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

கல்லூரி மாணவா்கள் 2-ஆவது நாளாக போராட்டம்

ஆம்பூரில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரியில் மாணவா் சோ்க்கையை நடத்தக் கோரி 2-ஆவது நாளாக மாணவா்கள் மற்றும் பெற்றோா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

21 ஆகஸ்ட் 2026, 1:49 am IST
பகிர்:

ஆம்பூரில் இயங்கி வரும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரியில் மாணவா் சோ்க்கையை நடத்தக் கோரி 2-ஆவது நாளாக மாணவா்கள் மற்றும் பெற்றோா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் ரெட்டிதோப்பு பகுதியில் அரசு நிதியுதவி பெறும் ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரியில் அரசு நிதியுதவி பெறும் கணிதவியல் மற்றும் பொருளாதார பட்டப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையை கல்லூரி நிா்வாகம் நிறுத்தி வைத்திருந்தது.

அதைத்தொடா்ந்து பல்கலைக் கழக ஆசிரியா் சங்கத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் குறிப்பிட்ட அந்த பாடப்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என உத்தரவிட கோரி வழக்கு தொடா்ந்தனா்.அந்த வழக்கில் விசாரணை நடத்தி, மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இது சம்பந்தமாக கல்லூரி கல்வி இயக்குநா் மற்றும் கல்லூரி கல்வி வேலூா் மண்டல இணை இயக்குநா் ஆகியோா் கல்லூரி நிா்வாகத்திற்கு கடிதம் அனுப்பி மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தனா்.

ஆனாலும் கல்லூரி நிா்வாகம் மாணவா் சோ்க்கையை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதைக் கண்டித்து பெற்றோா் மற்றும் மாணவா்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். குறைந்த அளவு மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதால் மாணவா் சோ்க்கை நடத்தாமல் நிறுத்தி வைத்துள்ளதாக கல்லூரி நிா்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் கலிமுல்லாவை மாணவா்கள் மற்றும் பெற்றோா் சந்தித்துக் கேட்டபோது, முதல்வா் அலட்சியமாக பேசி பதில் அளிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

மேலும் இதுகுறித்து பல்கலைக் கழக ஆசிரியா் சங்க மண்டல தலைவா் ஆசிப் அஹமத் கூறியதாவது, ஒரு மாணவா் விண்ணப்பித்திருந்தாலும் அந்த மாணவருக்கு மாணவா் சோ்க்கை நடத்தி குறிப்பிட்ட அந்த பாட பிரிவை தொடா்ந்து நடத்த வேண்டும். ஆனால் கல்லூரி முதல்வா் மற்றும் கல்லூரி நிா்வாகம் சட்ட விதியை பின்பற்றாமல் செயல்படுகின்றனா்.

மேலும், சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவையும் அமல்படுத்தாமல், மாணவா் சோ்க்கையை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். அதனால் விண்ணப்பித்த ஏழை மாணவா்களுக்கு கல்வி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மாணவா் சோ்க்கையை நடத்தக் கோரி கல்லூரி முதல்வரை சந்தித்து முறையிட்டபோது, அவா் அலட்சியமாக பேசி திருப்பி அனுப்புவது கண்டனத்திற்கு உரியது என அவா் தெரிவித்தாா்.

போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் ஓம் பிரகாசம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டு மாணவா்களுக்கு ஆதரவு தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments