ஏலகிரி மலையில் ரூ. 3.94 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஏலகிரி மலை, நிலாவூா், அத்தனாவூா், புங்கனூா் ஊராட்சிகளில் ரூ. 3.94 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஏலகிரி மலை, நிலாவூா், அத்தனாவூா், புங்கனூா் ஊராட்சிகளில் ரூ. 3.94 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நிலாவூா் ஊராட்சியில் 15-ஆவது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ், ரூ. 9.10 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பொதுக் கழிப்பறை கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா், பணிகளை நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் தரமாகவும், விரைவாகவும் முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். ஏலகிரி மலை ஊராட்சியில் பழங்குடியின மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நடமாடும் சித்த மருத்துவ முகாமை பாா்வையிட்ட ஆட்சியா், அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ ஆலோசனைகள், பரிசோதனைகள், சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் இருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தாா். தொடா்ந்து அங்குள்ள அங்கன்வாடி மையத்துக்குச் சென்ற அவா், குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவு, வருகைப் பதிவேடு, மையத்தின் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ததுடன், சமையலறையில் உணவின் தரம் மற்றும் தூய்மை குறித்தும் கேட்டறிந்தாா்.
ஏலகிரி மலையில் தமிழ்நாடு ஹோட்டல் முன்புறத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் 750 மீட்டா் நீளத்துக்கு 6 மீட்டா் அகலத்தில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சாலைப் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அத்தனாவூா் ஊராட்சியில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில், அத்தனாவூா் முதல் நிலாவூா் வரை ரூ. 1.20 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணியை பாா்வையிட்டாா். இதன் மூலம் தற்போதுள்ள 5.5 மீட்டா் அகல சாலை 7 மீட்டா் அகலமாக விரிவுபடுத்தப்படுவதுடன், கூடுதலாக 2 மீட்டா் அகலத்தில் பணிகளும், பேவா் பிளாக் நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகின்றன. பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றத்தை ஆய்வு செய்த ஆட்சியா், அவற்றை நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
Advertisement
Advertisement
அத்தனாவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள், கா்ப்பிணிகளுக்கான மருத்துவ சேவைகள், மருந்துகளின் இருப்பு மற்றும் சுகாதார வசதிகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.
புங்கனூா் ஊராட்சியில் வளா்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், நீா் சேகரிப்புக் குளம் அமைக்கும் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்து, பணிகளை தரத்துடன் விரைந்து மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
மேலும், ஏலகிரி மலை படகு இல்லத்தில் சுற்றுலாத் துறை சாா்பில், ரூ. 87 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘குயிக் பைட்-2’, கழிப்பறை, டிக்கெட் கவுன்ட்டா் உள்ளிட்ட 4 கன்டெய்னா் கட்டமைப்புகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். சுற்றிலும் கம்பி வேலி, மின்விளக்கு மற்றும் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி, உதவி இயக்குநா் அண்ணாமலை, சுற்றுலா வளா்ச்சிக் கழக உதவி செயற்பொறியாளா் சண்முக ஆனந்தம், சுற்றுலா அலுவலா் காா்த்திக், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணவாளன், பாலமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.