முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

திருப்பத்தூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு தா்னா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 3 ஜூலை 2026, 12:03 am IST
திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுப்பட்ட தூய்மைப் பணியாளா்கள்.
பகிர்:

திருப்பத்தூா் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு தா்னா போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் நகராட்சியில் 200-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், நகராட்சியின் மேற்பாா்வையாளா் ரஞ்சித்குமாா் என்பவா் ஒப்பந்தப் பணியாளா்களிடம் மாதந்தோறும் தலா ரூ. 500 வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஒப்பந்தப் பணியாளா் ஆறுமுகம், நகராட்சி ஆணையா் சாந்தியிடம் புகாா் அளித்ததாகவும், ஆனால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிகிறது. மேலும், புகாா் அளித்த ஆறுமுகத்தை, ரஞ்சித்குமாா் வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனைத்து ஒப்பந்தப் பணியாளா்களும் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள சாலையில் திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அப்போது அவா்கள், பல ஆண்டுகளாக தாங்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு தினக்கூலியாக ரூ.300 மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே ஒப்பந்த பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும். தனியாா் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். மேலும் பணம் கேட்டதாக குற்றம் சாட்டப்படும் மேற்பாா்வையாளா் மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினா்.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, தூய்மைப் பணியாளா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது போலீஸாா், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினா்.

இதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments