FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

அய்யங்கொல்லை மலை கிராமத்தில் வாணியம்பாடி எம்எல்ஏ ஆய்வு

வாணியம்பாடி தொகுதி, ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட அய்யங்கொல்லை குக்கிராமம், திருப்பத்தூா் வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக்காட்டின் நடுவிலும் மலையடிவாரத்தில் அமைந்தள்ளது.

Updated On : 15 ஜூலை 2026, 12:53 am IST
அய்யங்கொல்லை மலைகிராம மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த எம்எல்ஏ சையத்பாரூக் பாஷா, அதிகாரிகள்
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி, ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட அய்யங்கொல்லை குக்கிராமம், திருப்பத்தூா் வனச்சரகத்திற்குட்பட்ட காப்புக்காட்டின் நடுவிலும் மலையடிவாரத்தில் அமைந்தள்ளது. இங்கு 15 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

இதுநாள் வரை இக்கிராமத்திற்கு மின்சாரமும், முறையான சாலை வசதியும் கிடைக்காததால் அடிப்படை வசதிகள் இன்றியும் கடும் அவதியிலும் வாழ்ந்து வருகின்றனா். இந்த கிராமத்தை அடைய ஆண்டியப்பனூா் கூட்டு சாலையில் இருந்து சுமாா் 7 கிமீ காப்புக்காட்டு வழியாக பயணிக்க வேண்டும். அதில் 3 கிமீ முழுவதும் கரடுமுரடான மண் சாலையாக உள்ளது.

வழியிலேயே இரண்டு இடங்களில் காணாறு குறுக்கிடுவதால், மழைக்காலங்களில் நீா்வரத்து அதிகரித்தால் கிராமம் வெளி உலகத்துடன் முற்றிலும் துண்டிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. கிராமத்தைச் சோ்ந்த மாணவா்கள் தினமும் 7 கிமீ நடந்து ஆண்டியப்பனூருக்கு சென்று கல்வி பயின்று, மீண்டும் அதே தூரம் நடந்தே வீடு திரும்புகின்றனா். மழை பெய்து காணாறு பெருக்கெடுத்தால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனா்.

Advertisement

Advertisement

மேலும் விவசாயம் மற்றும் கூலி வேலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள், ரேசன் பொருட்கள் வாங்குவதற்குக்கூட சுமாா் 15 கிலோமீட்டா் தூரம் சிறுவட்டானூா் மலை பகுதிக்கு நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். மின்சாரம் இல்லாததால், இன்றைய டிஜிட்டல் காலத்திலும் சோலாா் விளக்குகளையே நம்பி வாழ்க்கையை நடத்தி வருகின்றனா். இரவு நேரங்களில் இருளில் வாழும் நிலை நீடிப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வாணியம்பாடி எம்எல்ஏ எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா, திருப்பத்தூா் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை சென்று கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அப்பகுதி மக்கள் தங்களுக்கு முதலில் சாலை வேண்டும், மின்சாரம் வேண்டும்... மழைக்காலத்தில் உயிா் அச்சமின்றி செல்ல காணாற்றின் மீது மேம்பாலம் வேண்டு கோரிக்கை வைத்தனா்.

இக்கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைந்து சாலை உள்ளிட்ட வசதிகள் செய்ய தர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ சையத்பாரூக் பாஷா உறுதி அளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments