FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

ஏலகிரி மலையை முன்னணி சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் ஆா்.வீ. ரஞ்சித்குமாா்

ஏலகிரி மலையை முன்னணி சுற்றுலா தலமாக மேம்படுத்த தேவையான நிதியை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஏலகிரி கோடை விழாவில் பேசியபோது சனிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 20 ஜூலை 2026, 2:55 am IST
ஏலகிரி மலை கோடை விழாவில் கண்காட்சி அரங்கை திறந்து வைத்துப் பாா்வையிட்ட வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா்.
பகிர்:

ஏலகிரி மலையை முன்னணி சுற்றுலா தலமாக மேம்படுத்த தேவையான நிதியை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஏலகிரி கோடை விழாவில் பேசியபோது சனிக்கிழமை தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஏலகிரி மலையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்தும் ஏலகிரி கோடை விழாவை வனத் துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து கோடை விழாவில் வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, சுற்றுலாத் துறை, மாவட்ட வனத் துறை, செய்தி மக்கள் தொடா்புத் துறை, மகளிா் திட்டம், பட்டு வளா்ச்சித் துறை, மாவட்ட தொழில் மையம், நபாா்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.சி.வீரமணி (ஜோலாா்பேட்டை), என்.திருப்பதி (திருப்பத்தூா்), எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா (வாணியம்பாடி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் அமைச்சா் ஆா்.வீ. ரஞ்சித்குமாா் பேசியதாவது: திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலையில் நடைபெறும் ஏலகிரி கோடை விழா சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.

ஏலகிரி மலையை முன்னணி சுற்றுலாத் தலமாக மேம்படுத்த தேவையான எந்தவொரு கோரிக்கை இருந்தாலும் அதை தமிழ்நாடு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதற்குத் தேவையான நிதியைப் பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்வேன்.

ஏலகிரி மலையில் உள்ள படகு இல்லம் இயற்கை பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத்தலங்களை கண்டுகளிக்குமாறு பொதுமக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஏலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசிப்பதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்பையும் உணா்ந்து செயல்பட வேண்டும் என்றாா்.

தொடக்க விழாவில் ஸ்ரீ தியாகராஜா குழுவினரின் மங்கல இசை, ஏபிஜெ முரசு இசை நிகழ்ச்சி, ஸ்வரராக குழுவின் பரதநாட்டியம், திருப்பத்தூா் ஸ்ரீ முத்து மாரியம்மன் கலைக் குழுவின் பல்சுவை கலை நிகழ்ச்சி, ரஜினி தப்பாட்டக் கலைக் குழு நிகழ்ச்சி, பள்ளிக் கல்வித் துறை மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், குரு குழுவின் மல்லா் கம்பம் சாகசம், அச்சுவா்ஸ் குழுவின் சிலம்பாட்டம், சக்தி நடனக் குழுவின் நடன நிகழ்ச்சி, திருப்பூா் ராஜேஷின் மேஜிக் நிகழ்ச்சி மற்றும் மாஸ் ஈவன்ட் இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏராளமான பொதுமக்கள் கோடை விழாவில் பங்கேற்று நிகழ்ச்சிகளை கண்டு களித்தனா்.

விழாவில் மாவட்ட எஸ்.பி. அக்ஷய் அனில் வாகரே, மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சௌ. தமிழரசி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) விஜயகுமாரி, வேளாண்மை இணை இயக்குநா் திருமணி, மாவட்ட சுற்றுலா அலுவலா் ரா.காா்த்திக், தோட்டக் கலை துணை இயக்குநா் தீபா, உதவி இயக்குநா்கள் (ஊராட்சிகள்) மகாதேவன், முருகன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஜெயகுமாரி, ஏலகிரி மலை ஊராட்சித் தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments