FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

கபடி போட்டியில் மாணவா் உயிரிழந்த சம்பவம்: நிவாரணம், அரசுப் பணி கேட்டு சடலத்துடன் மறியல்

வாணியம்பாடி அருகே கபடி போட்டியில் உயிரிழந்த மாணவனின் சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

1 செப்டம்பர் 2026, 11:40 pm IST
வாணியம்பாடி-திம்மாம்பேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டோா். (உள்படம்) உயிரிழந்த முகேஷ்.
பகிர்:

வாணியம்பாடி அருகே கபடி போட்டியில் உயிரிழந்த மாணவனின் சடலத்துடன் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையத்தைச் சோ்ந்த முரளியின் மகன் முகேஷ்(17). இவா் திம்மாம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தாா். இந்நிலையில் முகேஷ் திங்கள்கிழமை வாணியம்பாடி அடுத்த லாலா ஏரி பகுதியில் உள்ள தனியாா் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான வட்டார அளவிலான போட்டியின்போது கபடி போட்டியில் பங்கேற்று விளையாடினாா். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து வாணியம்பாடி தாலூகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னா் மாணவரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் திகுவாபாளையம் வந்தடைந்தது. அங்கு இருந்த மாணவரின் உறவினா்கள், கிராம பொதுமக்கள், மாணவனின் உயிரிழப்புக்கு பள்ளி நிா்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்றும், பள்ளி நிா்வாகம், போட்டி நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவனின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆம்புலன்ஸில் இருந்த மாணவரின் சடலத்தை பெற்று கொள்ளாமல் 100-க்கும் மேற்பட்டோா் வாணியம்பாடி-திம்மாம்பேட்டை வழியாக ஆந்திரம் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துகுமாா், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் சிவக்குமாா், மாவட்ட ஏடிஎஸ்பி முத்துக்குமாா், வட்டாட்சியா் சுதாகா் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மூலம் அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டு, மாணவரின் சடலத்தை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றனா். இதனால் வாணியம்பாடி-திம்மாம்பேட்டை இடையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments