போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியர் கைது
பொன்னேரி அரசுக் கல்லூரியில் போலி முனைவர் பட்ட சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
பொன்னேரி அரசுக் கல்லூரியில் போலி முனைவர் பட்ட சான்றிதழைக் கொடுத்து பணியில் சேர்ந்த பேராசிரியரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மகாலிங்கம்(40), தனது கல்லூரி படிப்புச் சான்றிதழை அளித்து பேராசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து இவரின் படிப்பு சான்றிதழ்கள் சரிபார்ப்புக்காக சென்னையில் உள்ள கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அப்போது, பிகார் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முனைவர் பட்டம் பெற்றதாக இவர் அளித்துள்ள சான்றிதழ் போலியானது என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசுக் கல்லூரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கல்லூரி தரப்பில் இருந்து பொன்னேரி காவல் நிலையத்தில் மகாலிங்கம் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பொன்னேரி போலீஸார் வழக்குப் பதிந்து, போலி சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் பணியாற்றி வந்த மகாலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.