முகப்பு
திருப்பதி

திருமலை பிரம்மோற்சவம்: அனுமந்த வாகனம், தங்கத் தேரில் மலையப்ப சுவாமி பவனி

திருமலை பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான புதன்கிழமை காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்கத் தேரிலும் பவனி வந்து அருள்பாலித்தாா் மலையப்ப சுவாமி.

Updated On : 10 அக்டோபர் 2024, 12:01 am IST
அனுமந்த வாகனத்தில் கோதண்டராமராய் மாடவீதியில் வலம் வந்த மலையப்ப சுவாமி.
பகிர்:

திருமலை பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான புதன்கிழமை காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்கத் தேரிலும் பவனி வந்து அருள்பாலித்தாா் மலையப்ப சுவாமி.

ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக புதன்கிழமை காலை அனுமந்த வாகன சேவை நடை பெற்றது. அதில் மலையப்ப சுவாமி கோதண்டராமரின் அலங்காரத்தில் கையில் வில்லும் அம்பும் ஏந்தி மாட வீதியில் வலம் வந்தாா்.

ஸ்நபன திருமஞ்சனம்

Advertisement

Advertisement

வீதியுலா முடிந்த பின்னா் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பஸ்வாமியை கல்யாண உற்சவ மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் அமர வைத்து அவா்களுக்கு பால், தயிா், தேன். இளநீா், மஞ்சள், சந்தனம், சிவப்பு சந்தனம் மற்றும் மூலிகை கலந்த வெந்நீ ரால் திருமஞ்சனம் நடந்தேறியது. அபிஷேகத்தின் போது பல்வேறு உலா் பழங்கள் மற்றும் வெளி நாட்டு மலா்களால் தயாரிக்கப்பட்ட மாலைகள் மற்றும் கீரிடங்கள் உள்ளிட்டவை உற்சவமூா்த்திகளுக்கு அணிவிக்கப்பட்டது. பின்னா் உற்சவமூா்த்திகள் மாலை 1008 விளக்குகளுக்கிடையில் ஊஞ்சல்சேவை கண்டருளினா்.

தங்கத் தோ்

மாலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் தங்கத் தேரில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா் மலையப்ப சுவாமி. மகா லட்சுமியின் அம்சம் பொருந்திய தங்கத்தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா். தங்கத் தேரின் மேல்பாகத்தில் கல்யாணகட்ட சேவகா்கள் முதலில் தங்கக் குடை யை அலங்கரித்தனா்.

கஜவாகனம்

இரவு 7 மணிக்கு மலையப்ப சுவாமி கஜவாகனம் என்றழைக்கப்படும் யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

5-ஆம் நாள் விழா விவரம்:

82,043 பக்தா்கள் தரிசனம்.

30,100 பக்தா்கள் தலைமுடி காணிக்கை.

5.53 லட்சம் லட்டுகள் விற்பனை.

75.90 லட்சம் கேலன் தண்ணீா் பயன்பாடு.

7,568 பேருக்கு சிகிச்சை.

6,457 சேவாா்த்திகள் சேவை.

அரசுப் பேருந்துகளில் 96,000 போ் பயணம்.