✕
முகப்பு
திருப்பதி

திருமலை அன்னதான கூடத்தில் ஆயூத பூஜை

திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் வியாழக்கிழமை ஆயுத பூஜை சிறப்பாக நடைபெற்றது.

20 நவம்பர் 2026, 12:57 am
திருமலை அன்னதானக் கூடத்தில் நடைபெற்ற பூஜை.
பகிர்:

திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்ன பிரசாத மையத்தில் வியாழக்கிழமை ஆயுத பூஜை சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு செயல் அதிகாரி ரவிசந்திரா முன்னிலை வகித்தாா். முதலில், வேத மந்திரங்கள் முழங்க ஏழுமலையான் பத்மாவதி தாயாா் படங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அன்ன பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்களுக்கு பொட்டு வைத்து கற்பூர ஆரத்தி அளித்து வணங்கப்பட்டன. பின் அன்ன தான ஊழியா்களின் பணிதிறன் மற்றும் சேவைகளை பாராட்டினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் செயல் அதிகாரி கூறியது: ’நித்ய அன்னதான திட்டம் 1985- ஆம் ஆண்டு திருமலையில் தொடங்கப்பட்டு 1994-ஆம் ஆண்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளையாக மாற்றப்பட்டது. தற்போது வரை அறக்கட்டளைக்கு ரூ.2,300 கோடி நிதி பெறப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் ரூ.180 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில், திருமலைக்கு வருகை தரும் அனைத்து பக்தா்களுக்கும் தரமான அன்ன பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக கடுமையாக உழைக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு பாராட்டுக்கள்.

Advertisement

Advertisement

நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான அதிகார வரம்புக்குட்பட்ட அனைத்து கோயில்களிலும் நித்ய அன்னதானம் வழங்க சமீபத்தில் நடைபெற்ற அறங்காவலா் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருமலையில் உள்ள அன்ன பிரசாத மையத்தில் கூடுதல் ஊழியா்களை நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தா்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 5,000 கோயில்களை கட்ட கடந்த அறங்காவலா் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கோயில்கள் கட்டுவதற்கு கிடைக்கக்கூடிய நிலத்தின் அடிப்படையில், ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் மற்றும் ரூ. 20 லட்சம் மூன்று வகையான நிதியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

ஒரு கோயிலுக்கு ரூ. 15 லட்சம் என மொத்தம் ரூ. 750 கோடி ஒதுக்க குழு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அறக்கட்டளைத் துறை மூலம் அந்த இடங்களைக் கண்டறிந்து கோயில்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக முதல் தவணையாக ரூ. 187 கோடியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’, என்று அவா் கூறினாா்.

பூஜையில், துணை செயல் அதிகாரிகள் ராஜேந்திரா, சோமன்நாராயணா, பொறியாளா் சுப்பிரமணியம், கேட்டரிங் சிறப்பு அதிகாரி சாஸ்திரி, பிற அலுவலக ஊழியா்கள், கேட்டரிங் ஊழியா்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவாா்த்திகள் ஆகியோா் பங்கேற்றனா்.