தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை அகற்ற:மக்கள் நலக் கூட்டணி தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: வைகோ பேச்சு
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை அகற்ற மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை அகற்ற மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.
திருவண்ணாமலையில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் மாநில துணைச் செயலர் க.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்.முத்தரசன்: கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர்.முத்தரசன் பேசுகையில், அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் திடீர், திடீரென பதவி நீக்கம் செய்யப்படுகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை நீதிமன்றம் விடுவித்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் ஊழல் குற்றவாளிகளாக உள்ளனர்.
Advertisement
Advertisement
எனவே தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. முதல்வரானால் ஊழல், மதுவை ஒழிப்பேன் என்று அன்புமணி கூறுகிறார். 5 ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த அவர் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் மீது லஞ்சம், ஊழல் என்ற குற்றச் சாட்டுகளைச் சொல்ல முடியாது.
எனவே, மக்கள் நலக் கூட்டணி தலைமையிலேயே நல்ல சமத்துவ ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்றார்.
தொல்.திருமாவளவன்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே மக்கள் நலக் கூட்டணி ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் திமுக, அதிமுகவை எதிர்த்து தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகளால் கூட அரசியல் நடத்த முடியவில்லை.
இந்தச் சூழ்நிலையில், தைரியம், தீரத்துடன் மக்கள் நலக் கூட்டணி வெற்றி நடை போட்டு வருகிறது. இந்தக் கூட்டணியை யாராலும் கலைக்க முடியாது.
கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிக்கவில்லை. திமுக, அதிமுக கூட்டணிக்கு அவர் செல்ல மாட்டார். அவர் மக்கள் நலக் கூட்டணிக்கு வர வேண்டும். தேர்தலில் திமுக, அதிமுகவை எதிர்க்கும் நோக்கில் நாம் வலிமையுடன் பணியாற்ற வேண்டும் என்றார்.
ஜி.ராமகிருஷ்ணன்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சர்க்கரை ஆலைகளைத் தவிர வேறு தொழிற்சாலைகள் இல்லை. கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை ஆண்ட கட்சிகள் ஏற்படுத்தவில்லை.
தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், செயல்பாடுகள் மாறவில்லை. ஊழல் செய்வதில் திமுக, அதிமுகவுக்கு இடையே வித்தியாசம் ஏதும் இல்லை.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் பகுதியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் கல்வி விற்பனையாகிறது என்று போராடிய மாணவிகள் கொல்லப்பட்டனர். இந்த மாணவிகள் மரணத்துக்காக குற்றவாளி கூண்டில் நிற்கவேண்டியவர்கள் அதிமுக, திமுக, பாமக கட்சிகள்தான் என்றார்.
வைகோ: கூட்டத்தில், மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசுகையில், தமிழக ஏழை மக்களைக் காக்கவே மக்கள் நலக் கூட்டணி உருவாகி உள்ளது. திமுக, அதிமுக கட்சிகள் ஏராளமான பணத்தை குவித்து வைத்துள்ளன. இதை வைத்து வாக்குகளை விலை கொடுத்து வாங்க அவர்கள் தயாராக உள்ளனர்.
அண்மையில் விளம்பரத்துக்காக மட்டும் திமுக, அதிமுக, பாமக ஆகியவை கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முயற்சிக்கிறது. இது, தமிழக மக்களின் ஓட்டுக்களை மொத்தமாகப் பெற ஜெயலலிதா நடத்தும் நாடகம். இந்த நாடகத்தில் கருணாநிதியும் கைதிகளை விடுவிக்கக் கோரிக்கை விடுக்கிறார்.
ஆனால், திமுக ஆட்சியின்போது சிறையில் இருந்த நளினியை பிரியங்கா காந்தி நேரில் சென்று மிரட்டியதாக செய்தி வெளியானது.
இந்த குற்றச்சாட்டுக்கு கருணாநிதி பதில் கூற வேண்டும். கடந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியை அகற்ற அண்ணா கூறியதை போல், இப்போது திராவிடக் கட்சிகளை அகற்ற மக்கள் நலக் கூட்டணி தொண்டர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கு.ஜோதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் பி.கா.அம்பேத்வளவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாமுவேல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி எஸ்.திருஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.