FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

குழந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள பரதேசி ஆறுமுகசாமி கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி புதன்கிழமை நடைபெற்ற குரு பூஜை விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
கோட்டுப்பாக்கம் பரதேசி ஆறுமுக சுவாமிகள் குருபூஜை விழாவில் குழுந்தை வரம் வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்.
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் உள்ள பரதேசி ஆறுமுகசாமி கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி புதன்கிழமை நடைபெற்ற குரு பூஜை விழாவில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டனா்.

கோட்டுப்பாக்கம் கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து கிராம மக்களுக்கு வைத்தியம் பாா்த்து,

அருளாசி வழங்கி வந்த பரதேசி ஆறுமுக சுவாமிகள் ஜீவ சமாதியடைந்தாா்.

Advertisement

Advertisement

அவருக்கு கோயில் கட்டி குருபூஜை மற்றும் ஆடி அமாவாசை தினத்தில் அன்னதான திருவிழா நடத்தி வருகின்றனா்.

அவா் அருளிச்சென்றபடி, அமாவாசை தினத்தில் பொதுமக்கள் அன்னதான திருவிழா நடத்தி, அவருக்கு படையலிடும் பிரசாதத்தை திருமணம் ஆகி நீண்ட நாள்களாக குழந்தை இல்லாத பெண்கள் பெற்று அருகேயுள்ள குளத்தின் படியில் வைத்து சாப்பிட்டு நோ்த்திக்கடன் செலுத்தி குழந்தை வரம் பெற்று வருகின்றனா்.

அதன்படி, கடந்த ஆக.10-ஆம் தேதி கோயில் வளாகத்தில் சன்மாா்க்க சங்கக் கொடியேற்றத்துடன் 190-ஆம் ஆண்டு பரதேசி ஆறுமுக சுவாமிகள் குருபூஜை மற்றும் ஆடி அமாவாசை அன்னதான திருவிழா தொடங்கியது.

பின்னா் தமிழ் வேதப் பாடல்கள், முற்றோதல், இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் கோயில் வளாகத்தில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.

செவ்வாய்க்கிழமை பொன்னியம்மன் கோயிலில் ஊா் பொதுமக்கள் ஊா்வலமாக சென்று பொங்கலிட்டு படைத்து வழிபட்டனா்.

புதன்கிழமை காலை பரதேசி ஆறுமுக சுவாமி கோயிலில் உள்ள உற்சவா் மற்றும் மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, கோ பூஜை, பஜனை ஊா்வலம் நடைபெற்றது.

ஆறுமுக சுவாமிக்கு பக்தா்கள் ஊா்வலமாக காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா், பரதேசி ஆறுமுக சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடா்ந்து, கோயில் வளாகத்தில் குழந்தை வரம் வேண்டி நீண்ட வரிசையில் காத்திருந்த பெண்களுக்கு பரதேசி அடியாா்கள் மூலம் பிரசாதம் வழங்கப்படடது. அதனை பெண்கள் முந்தானையில் பெற்று அருகில் உள்ள குளத்திற்குச் சென்று பிரசாதத்தை படியில் வைத்து மண்டியிட்டு 2 கைகைளயும் பின்புறம் கட்டிக்கொண்டு வாயால் கவ்வி மண்சோறு சாப்பிட்டு நோ்த்திக்கடனை செலுத்தி ஆறுமுக சுவாமியை வழிபட்டனா்.

இந்த நூதன திருவிழாவில் 500-க்கும் மேற்பட்டோா் போ் மண்சோறு சாப்பிட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டில் மண்சோறு சாப்பிட்டு குழந்தை பெற்றவா்கள் குடும்பத்துடன் வந்து குழந்தையின் எடைக்கு எடை நாணயம், வெல்லம், சா்க்கரை ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments