FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொறுமையைக் கடைப்பிடிப்பவர் ஒரு நாள் வாழ்வின் உச்சத்துக்கு சென்றுவிடுவர்: முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா

பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் ஒருநாள் வாழ்வின் உச்சத்துக்கு சென்றுவிடுவர். அப்படி பொறுமையுடன்

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் ஒருநாள் வாழ்வின் உச்சத்துக்கு சென்றுவிடுவர். அப்படி பொறுமையுடன் இருந்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச்  சென்றவர் வழக்குரைஞர் வி.சி.ராஜகோபாலாச்சாரியார் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா புகழாரம் சூட்டினார்.
வழக்குரைஞர் வி.சி.ராஜகோபாலாச்சாரியாரின் 22-ஆவது நினைவுச் சொற்பொழிவு வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா பேசியது:
வழக்குரைஞர் வி.சி.ராஜகோபாலாச்சாரியார் போன்ற சிறந்த மனிதநேயமிக்க மனிதரைப் பார்க்க முடியாது. ஏழை மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை அவர் தனது வாழ்க்கை முழுவதும் அளித்தார். வழக்குரைஞர் தொழிலுக்கு மிகவும் பொறுமை தேவை. அத்தகைய பொறுமையைக் கடைப்பிடித்தவர்கள் வாழ்வின் உச்சத்துக்கு ஒரு நாள் சென்றுவிடுவர். அப்படிப்பட்ட வழக்குரைஞராக வி.சி.ராஜகோபாலாச்சாரியார் விளங்கினார். அவர் பணத்துக்கும், புகழுக்கும் ஆசைபடாதவர். பல வழக்கறிஞர்களுக்கு குருவாக மட்டுமின்றி மனிதநேயத்துடனும் திகழ்ந்தவர். ஒரு வழக்கை எப்படி நடத்தவேண்டும் என்றும் வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் இருந்தவர் என்றார். 
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியது: 
வழக்குரைஞர் வி.சி.ராஜகோபாலாச்சாரியாரை போன்று நல் உள்ளம் கொண்ட வழக்குரைஞரை பார்ப்பது கடினம். பணம், புகழ், சொத்து, ஆரோக்கியம்  என்று தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் மக்களின் பிரச்னைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார். காந்தியவாதியான அவர் காலணிகூட அணியாமல் எளிமையாக வாழ்க்கை நடத்தினார்.
ஏழை மக்கள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நீதிமன்றத்தின் மேல்தான் உள்ளது. 2018-ஆம் ஆண்டு நிலவரப்படி உயர் நீதிமன்றத்தில் 42 லட்சம் வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் 55 ஆயிரம் வழக்குகள், கீழமை நீதிமன்றங்களில் 2.7 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
சட்ட ஆணையம் பரிந்துரைப்படி10 மில்லியன் மக்களுக்கு நூறு நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 10 நீதிபதிகள்தான் உள்ளனர். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், கீழமை நீதிமன்றங்கள் வழக்குகளை விரைவில் முடித்து தீர்ப்பு  வழங்க வேண்டும் என்றார். 
வழக்குரைஞர்கள் டி.எம்.விஜயராகவலு, என்.ராமநாதன், ஆர்.வி.வரதராஜன் ஆகியோர் வழக்குரைஞர் வி.சி.ராஜகோபாலாச்சாரியார் குறித்து நினைவுகூர்ந்து பேசினர். முன்னதாக விஐடி வணிக மேலாண்மை பள்ளி முதல்வர் பி.சுபஸ்ரீ வரவேற்றார். நிறைவில் பேராசிரியர் சக்திஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments