FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வேலூர் மாவட்ட பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி, வேலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

வைகுண்ட ஏகாதசியையொட்டி, வேலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் அருகே பள்ளிகொண்டா உத்தர ரங்கநாத பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னர், சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. 
இதன் வழியாக கருட வாகனத்தில் உற்சவர் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
இதேபோல், வேலூர் வேலப்பாடியில் உள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில், சலவன்பேட்டை பழனி ஆச்சாரி தெருவில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோயில், காந்தி நகர்,  கோபாலபுரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீமன் நாராயணமூர்த்தி கோயில், சத்துவாச்சாரி லட்சுமி நாராயணர் கோயில், சார்பனாமேடு கலாஸ் கோதண்டராம சுவாமி கோயில் ஆகியவற்றிலும் அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றன. 
மேலும், வைகுண்ட ஏகாதசியையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், விசேஷ தீபாராதனை ஆகியன நடைபெற்றன. 
வேலூரில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாளுக்கும், மலையடிவாரம் சக்தி நகரில் முத்துமாரியம்மன் கோயிலில் உள்ள பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நாள் முழுவதும் பூஜைகள் நடைபெற்றன.
திருப்பாற்கடல் கோயிலில்... 
நெமிலி வட்டம், காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யப்பட்டன. 
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. காலையில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மூலவரை தரிசித்து சொர்க்க வாசலைக் கடந்தனர்.
ஆம்பூரில்... ...
ஆம்பூரில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் மூலவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று, சொர்க்க வாசல் வழியாக உற்சவர் கருட வாகனத்தில் எழுந்தருளினார்.
ஆம்பூர் கோதண்டராம சுவாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சொர்க்க வாசல் வழியாக கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
 அதையடுத்து நடைபெற்ற  "திருப்பதியில் ஒரு நாள்' தரிசன நிகழ்ச்சியில்  திருப்பதி வெங்கடாசலபதி-பத்மாவதி தாயார் அலங்கார தரிசனம் நடைபெற்றது.  ஸ்ரீ மகாவிஷ்ணு சாய் சேவா அறக்கட்டளை சார்பில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆம்பூர் சான்றோர்குப்பம் சுந்தர விநாயகர் கோயில், வடசேரி சென்னகேசவ பெருமாள் கோயில், துத்திப்பட்டு பிந்து மாதவர் கோயில், மிட்டாளம் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயில், கோவிந்தாபுரம் கிராமத்தில் உள்ள பஜனை கோயில், பச்சகுப்பம் கிராமத்தில் உள்ள சீதாராமர் பஜனை கோயில், பெரியகரும்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில், கம்மகிருஷ்ணபள்ளி வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சொர்க்க வாசல் வழியாக உற்சவர் எழுந்தருளினார்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி பெரியப்பேட்டை அழகு பெருமாள் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. உதயேந்திரம் சுந்தரராஜ பெருமாள் கோயில், ஆவாரங்குப்பம்  பாலாற்றையொட்டி அமைந்துள்ள திருமால் முருகன் கோயில், நாட்டறம்பள்ளி பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.
ஆற்காட்டில்...
ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு ஆராதனை, திருப்பாவை சேவை, மூலவர் புறப்பாடு நடைபெற்றன. தொடர்ந்து வைகுண்ட வாசல் சிறப்பு புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. 
பெருந்தேவியார், வரதராஜப் பெருமாள், ஆஞ்சநேயருக்கு முத்தங்கி சேவையும், லட்சுமி நரசிம்மருக்கு புஷ்பங்கி சேவையும் நடைபெற்றன. 
ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரர் வரதராஜப் பெருமாள் கோயில், வளவனூர் கிராமத்தில் வளவநாராயண பெருமாள் கோயில்  ஆகியவற்றில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூர் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு உற்சவர் சொர்க்க வாசலைக் கடந்தார். மாலையில் சாமி கருட வாகனத்தில் வீதி உலா வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments