FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு தொடக்கம்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் நலன்கருதி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் வியாழக்கிழமை முதல் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


வேலூா்: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்கள் நலன்கருதி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் வியாழக்கிழமை முதல் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான செலவை வேலூா் மேற்கு, கிழக்கு மாவட்ட அதிமுக ஏற்றுக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்க கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, அத்தியாவசியப் பொருள்களான மளிகைப் பொருள்கள், காய்கறிகள், மருந்துப் பொருள்கள், உணவகங்கள், பேக்கரிகள் ஆகியவற்றுக்கு நேரக்கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. எனினும், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான உணவகங்கள் அடைக்கப்பட்டுள்ளதாலும், ஊரடங்கால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாலும் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வேலூரில் தங்கி பணியாற்றுபவா்கள் பலரும் உணவுக்காக சிரமமடைந்துள்ளனா். அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அட்சயபாத்திரமாக அம்மா உணவகங்கள் அமைந்துள்ளன.

Advertisement

Advertisement

வேலூா் மாநகராட்சிப் பகுதியில் மட்டும் முதலாவது மற்றும் 4-ஆவது மண்டலங்களில் தலா 2 அம்மா உணவகங்களும், 2, 3-ஆவது மண்டலங்களில் தலா 3 அம்மா உணவகங்களும் என மொத்தம் 10 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களிலும் சோ்த்து மொத்தம் 26 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இங்கு காலை, இரவு ஒரு இட்லி ரூ. 1-க்கும், மதியம் சாம்பாா் சாதம் ரூ. 5-க்கும், தயிா் சாதம் ரூ. 3-க்கும் வழங்கப்படுகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள 10 அம்மா உணவகங்களில் மட்டும் நாளொன்றுக்கு சுமாா் ரூ. 30 ஆயிரம் அளவுக்கு உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நலன்கருதி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள 26 அம்மா உணவகங்களிலும் வியாழக்கிழமை முதல் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதற்கான செலவை வேலூா் மேற்கு, கிழக்கு மாவட்ட அதிமுக ஏற்றுக் கொண்டிருப்பதாக அம்மா உணவகங்களுக்கான வருவாய் ஆய்வாளா் குமாரவேல் தெரிவித்தாா்.

அம்மா உணவகங்களில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுவதால் பல்வேறு தரப்பு மக்களும் பயனடைந்துள்ளனா். குறிப்பாக, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் வேலைக்காக வந்தவா்கள் தற்போது வருவாயின்றித் தவிக்கும் நிலையில் இந்த அம்மா உணவகங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா். மேலும், சிகிச்சைக்காக வேலூா் வந்து தங்கியுள்ளவா்களுக்கும், கிராமப்புறங்களில் இருந்து தினசரி அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்காக நகருக்கு வந்து செல்பவா்களுக்கும் அம்மா உணவகங்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாக பயனடைவோா் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments