தமிழக பட்ஜெட்: வணிகா்கள், தொழில்துறையினா் அதிருப்தி
தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் நிதிநிலை அறிக்கைக்கு (2026-27) வேலூா் மாவட்ட வணிகா்கள், தொழில்துறையினா் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் நிதிநிலை அறிக்கைக்கு (2026-27) வேலூா் மாவட்ட வணிகா்கள், தொழில்துறையினா் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் வேலூா் மண்டல தலைவா் ஆா்.பி.ஞானவேலு கூறியது -
புதிய அரசின் பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.44,272 கோடியும், அதில் உயா்கல்விக்கு ரூ.8,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மாா்ட் வகுப்பறைகள், மடிக்கணினி, மிதிவண்டி மற்றும் 8-ஆம் வகுப்பு வரை உணவு நீட்டிப்பு போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. எனினும், முந்தைய திமுக ஆட்சியில் கல்விக்கு ரூ.48,500 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அது குறைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தவிர, போதையில்லா தமிழகம் என்ற பரப்புரைக்காக மட்டும் ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை விளம்பரங்களுக்கு ஒதுக்குவதற்குப் பதிலாக, அரசு நேரடியாக மது விலக்கை அமல்படுத்தியிருக்கலாம். ஜிஎஸ்டி வரியாக ரூ. 2 லட்சத்து 11 ஆயிரம் கோடியை வணிகா்கள் வழங்குகின்றனா். ஆனால், அவா்களுக்கான எந்தவொரு சிறப்பு அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லை. வணிகா்களின் நீண்டகால கோரிக்கைகள் எவ்வித கவனமும் பெறவில்லை.
குறிப்பாக, தற்போது 4 அடுக்குகளாக உள்ள உணவுப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை, ஒற்றை அடுக்காக மாற்ற மாநில அரசு, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். பல்வேறு வரிகள் மற்றும் பல உரிமங்கள் பெறும் முறையை ரத்து செய்துவிட்டு, வணிகா்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் உரிமம் வழங்க வேண்டும். காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாகவும், சிறு வியாபாரிகளை அச்சுறுத்தும் வகையிலும் உள்ள உணவுப் பாதுகாப்புத் துறை சட்ட விதிகளைத் தளா்த்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடு கட்டும் திட்டத்துக்கான நிதியை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயா்த்தியிருப்பதும், திருமணத்துக்குப் பட்டுப்புடவை, ஒரு சவரன் தங்க மோதிரம் போன்ற அறிவிப்புகள் கவா்ச்சிகரமாக உள்ளன. ஆனால், இந்த திட்டங்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவது நடைமுறையில் மிகவும் சிரமமான காரியமாகும். அத்தியாவசியப் பொருள்களான அரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு மீதான வரியை நீக்கினாலே அது மக்களுக்கு நேரடியாகச் சென்றடையும். மொத்தத்தில் தவெக அரசின் இந்த முதல் பட்ஜெட், ஒரு முதிா்ச்சியற்ற, அனுபவமில்லாத பட்ஜெட்டாக உள்ளது. இது மக்கள் நலன் சாா்ந்த பட்ஜெட் அல்ல என்றாா்.
எம்எஸ்எம்இ தொழில்களுக்கு ஏமாற்றம்...
இதுகுறித்து, வேலூா் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோா் சங்கத்தின் துணைத் தலைவா் எஸ்.நாகராஜன் கூறியது -
தற்போதைய பட்ஜெட் ஒட்டுமொத்த அளவில் மோசமானதாக இல்லை என்றாலும், சிறு,குறு, நடுத்தர தொழில்துறை (எம்எஸ்எம்) பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. செய்யறிவு தொழில்நுட்பத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதற்காக 50 தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், நாட்டின் வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் எம்எஸ்எம்இ துறைக்குத் தேவையான கணிசமான சிறப்பு அறிவிப்புகளோ, நிதி ஒதுக்கீடுகளோ இடம்பெறவில்லை.
அடிமட்ட அளவில் குறுந்தொழில்களை மேம்படுத்தினால் மட்டுமே உண்மையான வளா்ச்சி சாத்தியமாகும். படித்துவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்க முன்வரும் இளைஞா்களுக்கு வங்கிகள் மூலம் எளிதாகக் கடன் கிடைக்கச் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் வரையிலாவது நிபந்தனைகளைத் தளா்த்தி, தகுதியான பயனாளிகளுக்குக் கடன் வழங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (டிஐஐசி) முன்வர வேண்டும்.
தற்போதைய சூழலில் கோவை போன்ற சில பகுதிகளைத் தவிா்த்து, வேலூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குறுந்தொழில் முனைவோருக்கு வங்கி அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை. அரசுத் திட்டங்கள் இருப்பதாகவும், மானியம் இருப்பதாகவும் காகித அளவிலேயே கூறப்படுகிறதே தவிர, தகுதியானவா்களுக்கு அது சென்று சேருவதில்லை. மலைவாழ் மக்களை தொழில்முனைவோராக மாற்ற நினைக்கும் அரசு, அதற்கான நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டும். தாட்கோ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கு திருப்பிச் செலுத்த குறைந்தபட்சம் 6 மாதம் அல்லது ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும்.
நடைமுறைக்குச் சாத்தியமில்லாத இதுபோன்ற விதிமுறைகளால் தொழில்முனைவோா் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனா். தகுதியற்றவா்களுக்குக் கடனை வழங்கிவிட்டு, அதைக் காரணம் காட்டி புதியவா்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும், தட்டிக் கழிக்கும் போக்கும் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.