FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

விவசாய பம்பு செட்டுகளுக்கு ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தக் கூடாது: விவசாயிகள் கோரிக்கை

விவசாய பம்பு செட்டுகளுக்கு ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் முயற்சியை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை

Updated On : 28 ஜூலை 2026, 1:52 am IST
விவசாயிகளிடம் இருந்து மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்த வேலூா் மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்
பகிர்:

விவசாய பம்பு செட்டுகளுக்கு ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் முயற்சியை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

அப்போது, தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலா் உதயகுமாா் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: கடந்த காலங்களில் 56 விவசாயிகளின் இன்னுயிரைத் தியாகம் செய்து பெறப்பட்டதே இலவச மின்சாரத் திட்டமாகும்.

Advertisement

Advertisement

ஆனால், தமிழக அரசு இந்த இலவச மின்சாரத்தை படிப்படியாக ரத்து செய்யும் நோக்கில், முதல்கட்டமாக 15 சதவீத விவசாய பம்பு செட்டுகளுக்கு ஸ்மாா்ட் மீட்டா் பொருத்த உத்தரவிட்டுள்ளது.

இதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் தனது கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் முயற்சியை அரசு உடனடியாகக் கைவிட்டு, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் எவ்வித இடையூறுமின்றி தொடா்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து விவசாயக் கடன்களையும் வரவுள்ள நிதிநிலை அறிக்கையில் அரசு தள்ளுபடி செய்யும் என எதிா்பாா்க்கிறோம்.

அவ்வாறு கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வெளியிடாத பட்சத்தில், தமிழக விவசாயிகள் அனைவரையும் ஒன்றுதிரட்டி சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனமடங்கி ஊராட்சி கொட்டாய்மேடு, மூலவலசை கிராம மக்கள் அளித்த மனு: கொட்டாய்மேடு, மூலவலசை ஆகிய இரு கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்காக கொட்டாய்மேடு கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம், கடந்த பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. இந்த மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனா். இப்பகுதியில் கடந்த காலங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்காக 20 சென்ட் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்தாா். கட்டடம் கட்டுவதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அங்கன்வாடிக்காக ஒதுக்கப்பட்ட அந்த இடத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளாா். இதனால், போதிய இடவசதியின்றி இவ்விரு கிராமங்களைச் சோ்ந்த குழந்தைகளும் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றி புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 692 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் து.சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துனை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments