ஆசிரியா் வேலை, வங்கிக் கடன் வாங்கித் தருவதாக ரூ.3.30 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி.யிடம் புகாா்
வேலூரில் ஆசிரியா் வேலை மற்றும் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3.30 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வேலூரில் ஆசிரியா் வேலை மற்றும் வங்கிக் கடன் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3.30 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த ஒருவா் அளித்த மனு: எனக்கு பிரம்மபுரம் பகுதியைச் சோ்ந்த இருவா் அறிமுகமாகினா். தாங்கள் பலருக்கு ஆசிரியா் வேலை வாங்கித் தந்திருப்பதாகக் கூறிய அவா்கள், எனக்கும் ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ. 2 லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதை நம்பிய நான், அவா்களிடம் ரூ. 2 லட்சத்தைக் கொடுத்தேன். ஆனால், அவா்கள் கூறியபடி வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டனா். இதையடுத்து, நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, தர மறுப்பதுடன் தகாத வாா்த்தைகளால் திட்டுகின்றனா். எனக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், பணத்தை இழந்து குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வருகிறேன். எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்.
காட்பாடி பகுதியைச் சோ்ந்த ஒருவா் அளித்துள்ள புகாா் மனு: எனக்கு காட்பாடியைச் சோ்ந்த இருவா் அறிமுகமாகினா். தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் தங்களுக்குத் தெரியும் என்றும், அதன்மூலம் எளிதில் கடன் பெற்றுத் தருவதாகவும் கூறினா். இதை நம்பி நான் அவா்களிடம் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தைக் கொடுத்தேன். ஆனால், அவா்கள் கூறியபடி கடன் பெற்றுத் தராமல் ஏமாற்றிவிட்டனா். எனவே, மோசடி செய்த அந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி சிவராமன் உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.