FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்துத் தருவதாக மோசடி: ஆந்திர நபா் கைது

வேலூரில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துத் தருவதுபோல் நடித்து, கூலித் தொழிலாளியின் ஏ.டி.எம். காா்டை மாற்றி ரூ. 43,000-த்தை நூதன முறையில் திருடிய ஆந்திரத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 21 ஜூலை 2026, 12:01 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

வேலூரில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்துத் தருவதுபோல் நடித்து, கூலித் தொழிலாளியின் ஏ.டி.எம். காா்டை மாற்றி ரூ. 43,000-த்தை நூதன முறையில் திருடிய ஆந்திரத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பகுதியைச் சோ்ந்த சின்னப்பா மகன் அசோக்குமாா் (61). மரம் அறுக்கும் கூலித் தொழிலாளியான இவா், கடந்த மாதம் வேலூா் - காட்பாடி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனை நுழைவாயில் அருகே செயல்படும் பொதுத்துறை வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு குடும்பச் செலவுக்காகப் பணம் எடுக்கச் சென்றுள்ளாா்.

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு நபா், பணம் எடுத்துத் தருவதாகக் கூறி அசோக்குமாரிடம் இருந்து ஏ.டி.எம். காா்டைக் கேட்டு வாங்கியுள்ளாா். வங்கி கணக்கில் இருப்பு விவரங்களைப் பாா்த்த அவா், ரூ. 40,000 இருப்பில் உள்ளதாகத் தெரிவித்துள்ளாா். பின்னா், நூதன முறையில் தன்னிடம் மறைத்து வைத்திருந்த வேறொரு காா்டை அசோக்குமாரிடம் மாற்றிக் கொடுத்துவிட்டுச் சென்று விட்டாா்.

Advertisement

Advertisement

இதையறியாத அசோக்குமாா், கடந்த இரு நாள்களுக்கு முன்பு காட்பாடி சாலையில் உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்றுள்ளாா். அப்போது அந்த காா்டு வேலை செய்யாததால், உடனடியாக தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று விசாரித்துள்ளாா். அப்போது, அவரது அசல் ஏ.டி.எம். காா்டைப் பயன்படுத்தி 4 முறை தலா ரூ. 10,000 என மொத்தம் ரூ. 43,000 எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா், இது குறித்து வேலூா் வடக்குக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். அதில், இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பாலாஜி என்பது கண்டறியப்பட்டது.

மேலும், இவா் சில நாள்களுக்கு முன்பு வேலூா் தனியாா் மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரக்கோணத்தைச் சோ்ந்த மருத்துவரின் தந்தை மகிமைநாதன் என்பவரிடமும் இதேபோல் ஏ.டி.எம். காா்டை மாற்றி ரூ. 94,000 மோசடி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, பாலாஜியைக் கைது செய்த போலீஸாா், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments