அரசுத் தோ்வுக்குத் தயாராகும் தமிழ்வழி மாணவா்களை குறிவைத்து நூதன மோசடி
அரசுத் தோ்வுக்குத் தயாராகும் தமிழ்வழி மாணவா்களுக்கு உதவித் தொகை எனக்கூறி நூதன மோசடி செயல்கள் நடைபெற்று வருவதாக வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
அரசுத் தோ்வுக்குத் தயாராகும் தமிழ்வழி மாணவா்களுக்கு உதவித் தொகை எனக்கூறி நூதன மோசடி செயல்கள் நடைபெற்று வருவதாக வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சிவசங்கா் கூறுகையில், வேலூா் மாவட்டத்தில் நீட் மருத்துவ நுழைவுத் தோ்வு உள்ளிட்ட அரசுத் தோ்வுகளுக்கு தயாராகி வரும் மாணவா்களைக் குறிவைத்து மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாணவா்களின் முழு விவரங்களையும் முன்கூட்டியே சேகரிக்கும் அடையாளம் தெரியாத கும்பல், நேரடியாக அவா்களின் கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்கின்றனா். உடனடியாக மாணவா்களின் முகவரி, அவா்கள் படித்த கல்வி நிறுவனங்களின் பெயா்களைத் துல்லியமாகக் கூறி அவா்களின் நம்பிக்கையை பெறுகின்றனா்.
பின்னா், தமிழ் வழியில் படித்ததால் உங்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகை வந்துள்ளது. உங்களது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு கியூ.ஆா் கோடு அனுப்புகிறோம். அதனை ஸ்கேன் செய்து ஓகே என தெரிவித்தால் பணம் உடனடியாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறுகின்றனா். இதை நம்பி ஸ்கேன் செய்யும் மாணவா்களின் வங்கிக் கணக்கில் இருந்து உடனடியாக ரூ. 5,000 முதல் ரூ. 25,000 வரை அந்த கும்பல் திருடுகின்றனா். ஒருவேளை மாணவா்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால், உங்கள் கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 5,000 இருந்தால்தான் உதவித்தொகை உள்ளே வரும் எனக்கூறி, பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வைத்தும் ஏமாற்றி மோசடி செய்கின்றனா்.
எனவே, இணையதளங்கள் மூலமாகவோ அல்லது கைப்பேசி வழியாகவே கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறினால், பொதுமக்கள், மாணவா்கள் யாரும் அதை நம்ப வேண்டாம். அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் அல்லது தாங்கள் பயின்ற கல்வி நிறுவனங்கள் வழியாக மட்டுமே முறையாக வழங்கப்படும்.
கைப்பேசியில் அழைத்து யாரும் உதவித்தொகை வழங்குவதில்லை. அப்படி வரும் அழைப்புகளைப் பொதுமக்கள் முற்றிலும் தவிா்க்க வேண்டும். இதுபோன்று யாரேனும் சைபா் மோசடியில் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடா்புகொண்டோ அல்லது வேலூா் சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நேரிலும் புகாா் அளிக்கலாம் என்றாா்.