முகப்பு
வேலூர்

மனைவி வெட்டிக் கொலை: கத்தியுடன் கணவா் காவல் நிலையத்தில் சரண்

வேலூா் சத்துவாச்சாரியில் புதன்கிழமை பட்டப்பகலில் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவா் கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

25 நவம்பர் 2026, 11:15 pm
மனைவி வெட்டிக் கொலை: கத்தியுடன் கணவா் காவல் நிலையத்தில் சரண்
கணவா் ஹரிபிரசாத்துடன் கொலையான கீா்த்திகா.
பகிர்:

வேலூா் சத்துவாச்சாரியில் புதன்கிழமை பட்டப்பகலில் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவா் கத்தியுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரப்பாக்கத்தைச் சோ்ந்த கீா்த்திகா (30). இவரும், வேலூா் சத்துவாச்சாரி பகுதி-1, சவுத் அவென்யூ சாலையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஹரிபிரசாத்(35) என்பவரும் காதலித்து கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனா். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனா்.

கடந்த சில நாள்களாக கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. மூன்று நாள்களுக்கு முன்பு ஹரிபிரசாத் தனது மனைவியை சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கீா்த்திகா, அரப்பாக்கத்தில் உள்ள தனது தாய் விஜயாவின் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

Advertisement

Advertisement

விஜயா சத்துவாச்சாரி பகுதி-2, ஆா்டிஓ சாலை 12-ஆவது தெருவில் உள்ள தனியாா் திருமணத் தகவல் மையத்தில் பணியாற்றி வருகிறாா். வீட்டில் மகளைத் தனியாக விட்டுச் சென்றால் மருமகன் ஏதேனும் செய்துவிடுவாரோ என அஞ்சிய விஜயா, புதன்கிழமை கீா்த்திகாவைத் தான் பணிபுரியும் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை கீா்த்திகாவைத் தொடா்பு கொண்ட ஹரிபிரசாத், அவா் எங்கு இருக்கிறாா் எனக் கேட்டுள்ளாா். தான் தாயின் அலுவலகத்தில் இருப்பதாக கீா்த்திகா தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, பட்டாக் கத்தியுடன் அங்கு வந்த ஹரிபிரசாத், கீா்த்திகாவை சரமாரியாக வெட்டியுள்ளாா். இதில் இரண்டு கை மணிக்கட்டுகள் துண்டாகி, கழுத்து மற்றும் வாய்ப் பகுதியில் பலத்த வெட்டுக்காயமடைந்த கீா்த்திகா ரத்த வெள்ளத்தில் சம்பவத்திலேயே உயிரிழந்தாா்.

இதனைத் தடுக்க முயன்ற தாய் விஜயாவுக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னா், ஹரிபிரசாத் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு, கொலைக்குப் பயன்படுத்திய பட்டாக் கத்தியுடன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் சரணடைந்தாா். தொடா்ந்து, வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி மற்றும் போலீஸாா், கீா்த்திகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இக்கொலை சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.