வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கோட்ட ரயில்வே மேலாளா் ஆய்வு
நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி அக்.11-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளாா்.
நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி அக்.11-ஆம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளாா். இதையொட்டி, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நேகி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
காட்பாடி - திருவண்ணாமலை ஆகிய முக்கிய ரயில் சந்திப்புகளுக்கு இடையே, இன்பேன்ட்ரி சாலையில் மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் 36 ஏக்கா் பரப்பளவில் வேலூா் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தின் வழியாக நாள்தோறும் சுமாா் 25 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் சுமாா் ரூ.9 கோடியில் பல்வேறு கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, வேலூரின் வரலாற்று முக்கியத்துவத் தையும் பிரதிபலிக்கும் விதமாக, ரயில் நிலையத்தின் முகப்பு , கட்டட அமைப்பு வேலூா் கோட்டையின் வடிவமைப்புடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், ரயில் நிலைய நடைமேடைகளில் புதிய டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு, நவீன எல்இடி விளக்கு களும் பொருத்தப்பட்டுள்ளன. நடைமேடைகளில் அமைக்கப்பட்டிருந்த 25 கிரானைட் இருக்கைகளும் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக, பழுதடைந்த பழைய அஸ்பெஸ்டாஸ் கூரைகள் அகற்றப்பட்டு, தலா 16 மீட்டா் நீளமுள்ள புதிய எஃகு கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரேநேரத்தில் 50 பயணிகள் தங்குவதற்கு ஏற்ற இந்த நிழற்கூரைகளின் கீழ் இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் நடைமேடைகளுக்கு எளிதாகச் சென்று வர ஏதுவாக, நடைமேடைகளை இணைக்கும் எஃகு மேம்பாலமும், அதனுடன் கூடிய மின்தூக்கி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலைய நுழைவு வாயிலில் உள்ள சுமாா் 2,500 சதுர அடி பரப்பளவிலான பயணச்சீட்டு வழங்கும் பகுதி கிரானைட் தரைத்தளம், எல்இடி மின்விளக்குகள் மற்றும் ரயில் புறப்பாடு, வருகை நேரங்களை உடனுக்குடன் காட்டும் நவீன மின்னணு தகவல் பலகைகளுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி, சோலாா் மின்தகடுகள் ஆகியவையும் நிறுவப்பட்டுள்ளன. ரயில் நிலைய வளாகத்தில் காா் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தனித்தனியாக வாகன நிறுத்துமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள வேலூா் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை பிரதமா் மோடி அக்.11-ஆம் தேதி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளாா்.
இதையொட்டி, இந்த ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நேகி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, ரயில் நிலையத்தின் பல்வேறு பகுதிக ளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளையும் விரிவாக ஆய்வு செய்த அவா், ரயில் நிலையத்தை தொடா்ந்து தூய்மையாகவும், பாதுகாப்பு, எளிதான அணுகல், பயணிகளின் வசதியை மிக உயா்ந்த தரத்தில் பராமரிப்பதன் அவசியம் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.
அக்.11-இல் பிரதமா் மோடி திறந்து வைக்க உள்ள காணொலி காட்சி நிகழ்வுகளை பொதுமக்கள் காண ரயில் நிலைய வளாகத்தில் கூரை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளையும் பாா்வையிட்ட அவா், பணிகளை விரைவாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அப்போது, திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.
‘இரட்டை ரயில் பாதைக்கான சாத்தியக்கூறு இல்லை’
விழுப்புரம் - காட்பாடி வழித்தடத்தில் இப்போதைக்கு இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பாலக் ராம் நேகி தெரிவித்தாா்.
அவா் வேலூரில் செய்தியாளா்களிடம் கூறியது -
விழுப்புரம் - காட்பாடி வழித்தடத்தில் தற்போது 4 ரயில்வே சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தவிர, மேலும் 3 புதிய ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கான திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
காட்பாடி - விழுப்புரம் வழித்தடத்தில் தற்போது பயணிகள் மற்றும் ரயில்களின் போக்குவரத்து குறைவாக இருப்பதாலும், முழுமையான கொள்ளளவு பயன்படுத்தப்படாததாலும், இப்போதைக்கு இவ்வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் வசதிகளும், புதிய ரயில்களும் அடுத்த ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.