FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

"ஹார்வர்டை தொடர்ந்து மேலும் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை'

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து மேலும் பல முக்கிய பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:08 am IST
பகிர்:

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து மேலும் பல முக்கிய பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான உலக ஒருங்கிணைப்பாளர் த.அ.வெற்றிச்செல்வன் கூறியுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை சார்பில், "உலக நாடுகளில் தமிழ்' என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்த் துறைத் தலைவர் தே.ஞானசேகரன் தலைமை தாங்கினார். இணைப் பேராசிரியர் சி.சித்ரா வரவேற்றார். நிகழ்ச்சியில், த.அ.வெற்றிச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
ஒரு காலத்தில் தமிழ் மொழி உலகம் முழுவதிலும் பரவியிருந்துள்ளது. உலக மக்களில் பெரும் பகுதியினர் இந்த பூமி தட்டையானது என்று நம்பியிருந்த காலத்திலேயே, பூமி உருண்டையானது என்பதை அறிந்து அதைப் பின்பற்றி நாள்காட்டியை தயாரித்தவர்கள்தமிழர்கள்.
மேலும், நமது ஓலைச் சுவடிகளில் மட்டுமே சுமார் 20 ஆயிரம் நோய்களுக்கான சித்த மருத்துவக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள மருந்துகள் சரியானதுதானா என்பதைக் கண்டறிந்து அவற்றுக்கு காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில் நம்முடைய முன்னோர்களின் கண்டுபிடிப்பான யோகா தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு ஆய்வைத் தொடர்ந்தே உலக நாடுகள் யோகா கலை குறித்த விழிப்புணர்வைப் பெற்றனர்.
அதைப் போலவே எதிர்காலத்தில் சித்த மருத்துவமும் பரவக் கூடும். தற்போது ஹார்வர்டில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டுள்ளதால், அங்கு ஆராய்ச்சிப் படிப்புகளைப் பயிலுபவர்கள் கூடுதல் மொழியாக தமிழைப் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
பழைமையான, புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டிருப்பதால் அமெரிக்காவின் பிற பல்கலைக்கழகங்களிலும் உலகின் பிற முக்கிய பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை தொடங்குவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்த முயற்சிகளால் விரைவில் தமிழ் உலகமயமாகும்.
இதன் மூலம் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு உலகம் முழுவதிலும் வாய்ப்புகள் கிடைக்கும். நியூயார்க்கின் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு அனுமதி கோரி 5 ஆண்டுகளாக காத்திருந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகம் அனுமதியைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக அனுமதித்துள்ளனர்.
அதேபோல், கனடாவின் டோரண்டோ பல்கலைக்கழகமும் கடந்த ஜூன் 25-ஆம் தேதி அனுமதி அளித்துள்ளது. டோரண்டோவில் சுமார் 5 லட்சம் தமிழர்கள் வசிக்கும் நிலையில், இது அவர்களின் குழந்தைகள் தமிழ் கற்பதற்கு வாய்ப்பாக அமையும். இந்த பல்கலைக்கழகத்துக்கு சுமார் ரூ.15 கோடி செலுத்த வேண்டியுள்ள நிலையில், இதில் சுமார் ரூ.40 லட்சம், அறிவிப்பு வெளியான முதல் நாளிலேயே திரட்டப்பட்டுள்ளது.
இதேபோல் லண்டன் பல்கலைக்கழகம், ஹூஸ்டன் பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கு இருக்கை தொடங்க அந்தந்தப் பகுதி தமிழர்கள் அனுமதி பெற்றுள்ளனர். அதேபோல் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களிலும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர், உலகம் முழுவதிலும் உள்ள 45 புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கை அமைப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
 உதவிப் பேராசிரியர் ச.தங்கமணி நன்றி கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments