FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி காரமடை அரங்கநாத சுவாமி  கோயிலில் சொர்க்க வாசல் செவ்வாய்க்கிழமை  திறக்கப்பட்டு, திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

வைகுண்ட ஏகாதசியையொட்டி காரமடை அரங்கநாத சுவாமி  கோயிலில் சொர்க்க வாசல் செவ்வாய்க்கிழமை  திறக்கப்பட்டு, திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.
  மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி நாளானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த நாளில் பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
  கொங்கு மண்டலத்தில் உள்ள வைணவத் தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த காரமடையில் உள்ள அரங்கநாத சுவாமி  கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8ஆம் தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. அரங்கநாதப் பெருமாளை போற்றி 12 ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரத் திவ்யபிரபந்தப்  பாசுரஙகள் திங்கள்கிழமை வரை தினமும் காலையில் 200 பாசுரங்கள் வீதம் ஸ்தலத்தார் நல்லான்சக்ரவர்த்தி சுவாமிகள், வேதவியசர் சுதர்சனப் பட்டர் சுவாமிகள் ஆகியோர் பெருமாள் முன்னிலையில் சேவித்து வந்தனர்.
 இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் அரங்கநாத சுவாமிக்கும், உற்சவர் அரங்கநாதப் பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன.
  இதனையடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாதப் பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்பிரகாரம் வலம் வந்து ஸ்ரீ ஆண்டாள் தாயார் சன்னதி முன் வீற்றிருந்தார்.
  காலை 5.30 மணி அளவில் அரங்கநாதப் பெருமாள் பாதத்தில் வைத்திருந்த சொர்க்க வாசல் கதவு சாவியை வேதவியசர் சுதர்சன பட்டர் சுவாமிகள் எடுத்து காரமடை ஊர் கவுண்டர் இடம்  கொடுத்தார். சாவியைப் பெற்றுக்கொண்ட அவர் சொர்க்க வாசல் கதவினைத் திறந்து வைத்தார். இதனையடுத்து சொர்க்க வாசல் வழியே பெருமாள் எழுந்தருளினார். ஏற்கெனவே சொர்க்க வாசலுக்கு வெளியே வீற்றிருந்த நம்மாழ்வார், ராமனுஜர், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரும் பெருமாளை எதிர்கொண்டு சேவித்தனர். அவர்கள் மூவருக்கும் பெருமாள் காட்சி தந்தார். அதையடுத்து முதலில்  திருக்கோயில் சார்பாக அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தலில் வீற்றிருந்து மண்டபக் கட்டளையை ஏற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இதனையடுத்து நகர் வலம் செல்ல பெருமாள் புறப்பாடானார். சொர்க்க வாசல் வீதி, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகளில் 30க்கும் மேற்பட்ட சமுதாய சங்கத்தினர்கள் உள்பட பொதுநல சங்கத்தினர்களால் அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தல்களுக்கு வந்து மண்டபக் கட்டளைகளை ஏற்று அனைத்து பக்தர்களுக்கும் அருள்பாலித்தார். ஸ்ரீதேவி, பூதேவியுடன் நகர்வலம் வந்த அரங்கப்பெருமாளுக்குப் பின்னால் தாசபளஞ்சிக மகாஜன சங்கம், சந்தான வேணுகோபால சுவாமி பஜனை குழுவினர் ஆடிப்பாடி வந்தனர். இரவு 10:30 மணி அளவில் திருக்கோயில் வசந்தம் மண்டபத்திற்கு அரங்கநாதப் பெருமான் வந்து சேர்ந்தார். இதனையடுத்து இராப் பத்து உற்சவம் தொடங்கியது. பெரியநாயக்கன்பாளையம் சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் மணி மேற்பார்வையில் காரமடை இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கோவை பெருமாள் கோயில்களில்...:கோவை உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
  மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருமாலின் இருப்பிடமாகக் கருதப்படும் வைகுண்டத்தின் கதவுகள் இந்த ஏகாதசியின்போது திறக்கப்படுவதாக நம்பப்படுவதால், இந்த நாளில் உறங்காமல் காத்திருக்கும் பக்தர்கள், அதிகாலையில் திறக்கப்படும் சொர்க்க வாசல் வழியாக வரும் பெருமாளை வழிபடுவார்கள். 
    இந்த ஆண்டின் வைகுண்ட ஏகாதசி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. கோவையில் வழக்கமான உற்சாகத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவை, பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் காலை 5 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த ஏராளமான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். இதைத் தொடர்ந்து கோயிலில் காலை 7 மணிக்கு சேஷ வாகன திருவீதி உலாவும், 10 மணிக்கு உத்ஸவர் திருமஞ்சனமும் நடைபெற்றன. 
   பேட்டை, உப்பார வீதி அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டிசெவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், திருவாராதனமும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து காலை 5.30 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
   வரதராஜபுரத்தில் உள்ள கரிவரதராஜப் பெருமாள் கோயில், வெங்கிட்டாபுரம் காரண கரிவரதராஜப் பெருமாள் கோயில், ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள நரசிங்க பெருமாள் கோயில், ராம் நகர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில், கணபதி வேணுகோபால சுவாமி கோயில், சிங்காநல்லூர் உலகளந்த பெருமாள் கோயில், உக்கடம் நரசிம்மப் பெருமாள் கோயில், விளாங்குறிச்சி ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், மருதமலை கரிவரதராஜப் பெருமாள், பேரூர் வரதராஜப் பெருமாள் சன்னிதி
களிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு அர்ச்சனை, திருவீதி உலாவுடன் வழிபாடுகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments