ரூ.1.18 கோடி போலி நோட்டு வழக்கில் தேடப்பட்டவர் சரண்
கோவையில் போலியாக அச்சடிக்கப்பட்ட ரூ. 1.18 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரண் அடைந்தார்.
கோவையில் போலியாக அச்சடிக்கப்பட்ட ரூ. 1.18 கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டவர் நீதிமன்றத்தில் புதன்கிழமை சரண் அடைந்தார்.
கோவை, தடாகம் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 1) போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் போலியாக அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த பி.ஆனந்த் (31) என்பது தெரிந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.
இதனிடையே, ஆனந்த் கொடுத்த தகவலின்படி வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள அவர்களது கடையில் இருந்து ரூ.1.18 கோடி மதிப்பிலான போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்திருந்தனர். இதுதொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் கு.பெரியய்யா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் இந்த வழக்கில் தொடர்புடைய வடவள்ளியைச் சேர்ந்த கிதர் முகமது (55), காரமடையைச் சேர்ந்த சுந்தர் (48) ஆகியோரைத் தேடிவந்தனர். இதனிடையே, ஆனைகட்டியில் பதுங்கி இருந்து கிதர் முகமதுவை திங்கள்கிழமை (ஜூன் 4) கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சுந்தரை கேரளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.
நீதிமன்றத்தில் சரண்: இந்நிலையில், தனிப்படையினரால் தேடப்பட்டு வந்த சுந்தர், கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் (ஜெ.எம்.7) நீதிமன்றத்தில் புதன்கிழமை சரண் அடைந்தார். அப்போது அவரை வரும் ஜூன் 20ஆம் தேதி வரையில் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் பாண்டி உத்தரவிட்டார். இதையடுத்து கோவை மத்திய சிறையில் சுந்தர் அடைக்கப்பட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.