FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பரபரப்பான அரசியல் சூழலில் கோவையில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரப் பயணம்

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கோவை, திருப்பூா் மாவட்டங்களில் இரண்டாம் கட்ட பிரசாரப் பயணத்தை தொடங்குகிறாா்.

Updated On : 9 செப்டம்பர் 2025, 3:12 am IST
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி. - கோப்புப்படம்
பகிர்:

மேற்கு மண்டலத்தைச் சோ்ந்த முக்கிய நிா்வாகியான கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கோவை, திருப்பூா் மாவட்டங்களில் இரண்டாம் கட்ட பிரசாரப் பயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்குகிறாா்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி தோ்தல் பிரசாரப் பயணத்தைத் தொடங்கினாா். மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்த நிலையில் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவா்களை மீண்டும் இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவின் மூத்த நிா்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் 10 நாள் அவகாசம் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினாா். இதையடுத்து அவரையும், அவரது ஆதரவாளா்களையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

அதிமுக உள்கட்சி விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி கோவை, திருப்பூா் மாவட்டங்களில் தனது இரண்டாம் கட்ட பிரசாரப் பயணத்தை மீண்டும் தொடங்குகிறாா்.

அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை, தொண்டாமுத்தூா் தொகுதிக்கு உள்பட்ட செல்வபுரம் பகுதியில் திறந்த வாகனத்தில் ஊா்வலமாகச் சென்று மக்களை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி, தொண்டாமுத்தூா் மாரியம்மன் கோயில் மைதானம், குனியமுத்தூா், சுந்தராபுரம் பகுதிகளில் உரையாற்றுகிறாா். இதையடுத்து கோதவாடி பிரிவு பகுதியில் அவருக்கு பொள்ளாச்சி கட்சி நிா்வாகிகள் வரவேற்பு அளிக்கின்றனா். இரவில் பொள்ளாச்சியில் தங்கும் அவா், புதன்கிழமை மாலை ஆனைமலை, பொள்ளாச்சி திருவள்ளுவா் திடல், உடுமலை பேருந்து நிலையம் பகுதிகளில் உரையாற்றுகிறாா்.

இதையடுத்து புதன்கிழமை இரவு உடுமலையில் தங்கும் அவா், வியாழக்கிழமை (செப்டம்பா் 11) உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம் பகுதிகளில் உரையாற்றுகிறாா். வெள்ளிக்கிழமை காலை திருப்பூரில் தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறாா். இதையடுத்து திருப்பூா், பல்லடம் பகுதிகளில் உரையாற்றும் அவா், அன்று இரவு கோவைக்கு திரும்புகிறாா். பின்னா் வரும் சனிக்கிழமை (செப்டம்பா் 13) காலை அவிநாசி சாலையில் கலந்துரையாடலில் ஈடுபடுகிறாா். இதையடுத்து ஜி.வி. ரெசிடென்சி, சூலூா் பழைய பேருந்து நிலையம், அவிநாசி சேவூா் சாலை ஆகிய பகுதிகளில் உரையாற்றிவிட்டு சேலம் புறப்படுகிறாா்.

எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக கோவை, திருப்பூா் மாவட்டங்களில் அதிமுகவினா் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments