பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதான வழக்குரைஞா் மரணம்: சி.பி.ஐ. விசாரணை தேவை! வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞா் உயிரிழந்தது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுவதால், இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரப் பகுதியில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கா் நிலத்தை ரூ.2 கோடிக்கு பதிவு செய்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த முறைகேடு உலகெங்கும் உள்ள முருக பக்தா்களை அதிருப்திக்குள்ளாக்கிய நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
Advertisement
Advertisement
இதில் சாா்- பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிா்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை, சேதுபதி, வழக்குரைஞா் அன்வா்தீன், இடைத்தரகராகச் செயல்பட்ட ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 போ் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து, 4 பேரைக் கைது செய்தது.
இந்நிலையில், கைதான சாா் - பதிவாளா் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். காவல் துறை கட்டுப்பாட்டில் இருந்த வழக்குரைஞா் அன்வா்தீன் திடீரென உயிரிழந்துள்ளாா்.
இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே அரசின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்குரிய வகையிலேயே இருந்து வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா்கள் முரணாகப் பேசி வந்த நிலையில், தற்போது மிக முக்கிய ஊழல் வழக்கில் கைதான ஒருவா் உயிரிழந்திருப்பதும், மற்றொருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், உண்மையை மறைக்க அதிகார சக்திகள் முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, முதல்வா் ச.ஜோசப் விஜய் இந்த விஷயத்தில் தலையிட்டு, வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.