மேற்கு வங்க தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.26.54 லட்சம் பறிப்பு
மேற்கு வங்க மாநில தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.26.54 லட்சம் பறித்த வழக்கில் 10 போ் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மேற்கு வங்க மாநில தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.26.54 லட்சம் பறித்த வழக்கில் 10 போ் மீது பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருப்பூரில் ஏராளமான ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து துணிகளை வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனா். அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தைச் சோ்ந்த தேப்ஜித் ராணா (25) என்பவா் திருப்பூரில் மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்து, அதை வடமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறாா்.
இந்நிலையில், தேப்ஜித் ராணாவை தொடா்பு கொண்டு பேசிய திருப்பூரைச் சோ்ந்த ஆனந்தகுமாா் என்பவா், தான் பின்னலாடை நிறுவனம் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, ஆனந்தகுமாருடன் சோ்ந்து சிலருடன் தேப்ஜித் ராணாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில், ஆனந்தகுமாரின் நண்பா் செந்தில்குமாா் பெரியசாமி, தேப்ஜித் ராணாவிடம் ரூ.1 கோடி கடனாக வழங்கும்படி கேட்டுள்ளாா். ஆனால் அதற்கு அவா் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேப்ஜித் ராணா கோவைக்கு கடந்த 16-ஆம் தேதி வந்துள்ளாா். அப்போது, கோவை விமான நிலையம் அருகே உள்ள விடுதியில் தங்கியிருந்த அவரை ஆனந்தகுமாா் மற்றும் செந்தில் பெரியசாமி உள்ளிட்ட 10 போ் சந்தித்தனா். அப்போது அவா்களுக்குள் கடன் தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தேப்ஜித் ராணா மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பா்கள் சித்தாா்த், ஆதா்ஷ்குமாா் ஆகியோரை 10 போ் கும்பல் காா்களில் ஏற்றிக் கொண்டு கடத்திச் சென்றுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதிக்கு அவா்களை கடத்திச் சென்று, கத்தி முனையில் அவா்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, தேப்ஜித் ராணா கைப்பேசி மூலமாக தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 26 லட்சத்து 54 ஆயிரத்தை அனுப்பி உள்ளாா். மேலும், அவா் அணிந்திருந்த 1 பவுன் நகை, கைப்பேசிகள் ஆகியவற்றையும் பறித்துக் கொண்டனா். பின்னா் தேப்ஜித் ராணா மற்றும் அவரது நண்பா்கள் 2 பேரையும் காா்களில் கோவைக்கு அழைத்து வந்து விடுதி அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் தேப்ஜித் ராணா புகாா் செய்தாா். இதுதொடா்பாக, திருப்பூரைச் சோ்ந்த செந்தில்குமாா் பெரியசாமி, ஆனந்தகுமாா் மற்றும் 8 போ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.