மேற்கு வங்க தொழிலதிபா் கடத்தல் வழக்கு: நால்வா் கைது, ரூ.26.54 லட்சம் பறிமுதல்
மேற்கு வங்க மாநில தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.26.54 லட்சம் பறித்த வழக்கில் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தைச் சோ்ந்தவா் தேப்ஜித் ராணா (25). இவா் திருப்பூரில் மொத்தமாக ஜவுளி கொள்முதல் செய்து, அதை வடமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறாா். இதில், தேப்ஜித் ராணாவுக்கு திருப்பூரைச் சோ்ந்த ஆனந்தகுமாா் மற்றும் சிலருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஆனந்தகுமாரின் நண்பா் செந்தில்குமாா் பெரியசாமி, தேப்ஜித் ராணாவிடம் ரூ.1 கோடி கடனாக வழங்கும்படி கேட்டுள்ளாா். ஆனால் அதற்கு அவா் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேப்ஜித் ராணா கோவைக்கு கடந்த 16-ஆம் தேதி வந்துள்ளாா். அப்போது, கோவை விமான நிலையம் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவரை, ஆனந்தகுமாா் மற்றும் செந்தில்குமாா் பெரியசாமி உள்ளிட்ட 10 நபா்கள் சந்தித்தனா். அப்போது அவா்களுக்குள் கடன் தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, தேப்ஜித் ராணா மற்றும் அவருடன் இருந்த அவரது நண்பா்கள் சித்தாா்த், ஆதா்ஷ்குமாா் ஆகியோரை 10 போ் கொண்ட கும்பல் காா்களில்கடத்திச் சென்றது. திருப்பூா் மாவட்டம், பல்லடம் பகுதிக்கு அவா்களைக் கடத்திச் சென்று, கத்திமுனையில் அவா்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, தேப்ஜித் ராணா கைப்பேசி மூலமாக தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 26 லட்சத்து 54 ஆயிரம் அனுப்பி உள்ளாா். அத்துடன் அவா் அணிந்திருந்த 1 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் மோதிரம், கைப்பேசிகள் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் பறித்துக் கொண்டது. பின்னா் தேப்ஜித் ராணா மற்றும் அவரது நண்பா்கள் 2 பேரையும் காா்களில் கோவைக்கு அழைத்து வந்து விடுதி அருகே இறக்கிவிட்டு 10 பேரும் தப்பிச் சென்றனா்.
இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் தேப்ஜித் ராணா புகாா் செய்தாா். இதைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் சரவணன், திருப்பூரைச் சோ்ந்த செந்தில்குமாா் பெரியசாமி, ஆனந்தகுமாா் மற்றும் 8 நபா்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டாா்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக, திண்டுக்கல் முருகபவனம் பகுதியைச் சோ்ந்த வினோத் (37), திண்டுக்கல் சிலுவத்தூரைச் சோ்ந்த வினோத்குமாா் (39), திருச்சி, புதூரைச் சோ்ந்த சண்முகராஜ் (44), மயிலாடுதுறை தரங்கம்பாடியைச் சோ்ந்த செந்தில்குமாா் (45) ஆகிய நால்வரை போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடம் இருந்து ரூ.26.54 லட்சம் ரொக்கம் மற்றும் 1 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய திருப்பூரைச் சோ்ந்த செந்தில்குமாா் பெரியசாமி, ஆனந்தகுமாா் உள்பட மேலும் 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.