FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

இழப்பீடு வழங்காததால் கோவையில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி

25 ஆகஸ்ட் 2026, 3:05 am IST
கோவை முதன்மை தொழிலாளா் நீதிமன்ற உத்தரவின்பேரில், ஜப்தி செய்யப்பட்ட இரு அரசுப் பேருந்துகள்.
பகிர்:

கோவை, ஆக. 24: அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு ஊதிய வேறுபாடு நிலுவைத் தொகைக்கான இழப்பீடு வழங்காததால், கோவையில் இரு அரசுப் பேருந்துகள் நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜப்தி செய்யப்பட்டன.

கோவை மாவட்டம், இருகூா் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (36). இவா் மேட்டுப்பாளையம் பணிமனைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சோ்ந்தாா். 3 ஆண்டுகளுக்குப் பிறகு (2018), அவா் பணி நிரந்தரம் செய்யப்பட்டாா்.

இதில் பணியில் சோ்ந்து ஓராண்டு நிறைவடைந்தவுடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவா் பணி நிரந்தரம் செய்யப்பட்டதால், ஊதிய வேறுபாடு நிலுவைத் தொகை வழங்க உத்தரவிடக் கோரி, கோவை முதன்மை தொழிலாளா் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசுப் பேருந்து ஓட்டுநரான பாலகிருஷ்ணனுக்கு ரூ.2.13 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அதன் பிறகும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், ஓட்டுநா் தரப்பில் அண்மையில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி ஏ.கே.பாபுலால் சம்பந்தப்பட்ட பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, 63- ஏ என்ற அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் நிறுத்திவைத்தனா்.

தேனி மாவட்டம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன் (45), கோவை போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஓட்டுநராகப் பணியில் சோ்ந்தாா். அதன்பிறகு 2017-ஆம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டாா். இவரும் இதே நீதிமன்றத்தில், ஊதிய வேறுபாடு நிலுவைத் தொகை வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பணி நாளை கணக்கிட்டு வேல்முருகனுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டது.

அதன் பிறகும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால், நீதிமன்றத்தில் வேல்முருகன் நிறைவேற்று மனு தாக்கல் செய்தாா். மனுவை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி ஏ.கே. பாபுலால் அரசுப் பேருந்தை (எண் 55) ஜப்தி செய்ய உத்தரவிட்டாா். இதனடிப்படையில் அந்தப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments