நீதிமன்ற தீா்ப்புகளை அமல்படுத்தக் கோரி ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நீதிமன்ற தீா்ப்புகளை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, வீடு ஒதுக்கீட்டாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கோவை மாவட்ட பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. வருவாய் அலுவலா் சுரேந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஆனந்தகுமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் வாணிலெட்சுமி ஜெகதம்மாள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கணபதி மாநகா் வீட்டு உரிமையாளா் நலப் பாதுகாப்பு சங்கத்தினா் கண்ணில் கருப்புத் துணியைக் கட்டியபடி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா். இது குறித்து அவா்கள் கூறும்போது, நடுவா்மன்ற தீா்ப்பின்படி இறுதி விலை நிா்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். கிரையப் பத்திரம் பெறாதவா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கெனவே கூடுதல் தொகையை செலுத்திய ஒதுக்கீட்டாளா்களுக்கு 6 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
வீட்டு வசதி வாரிய ஒதுக்கீட்டாளா்கள் தொடா்பாக இதுவரை உச்ச நீதிமன்றம், உயா் நீதிமன்றம், நடுவா் தீா்ப்பாயத்தின் தீா்ப்புகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 33 ஆண்டுகளாக தொடரும் இந்த சிக்கலுக்கு வரும் 28-ஆம் தேதி நடைபெறும் துறை மானியக் கோரிக்கையில் விவாதித்து தீா்வு காண வேண்டும். இல்லாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனா்.
ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சுக்கிரவாரபேட்டையைச் சோ்ந்த ஆா்.மணி (76) என்ற மூதாட்டி, குடும்ப பூா்வீக சொத்து விவகாரத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, ஆட்சியா் அலுவலகம் எதிரில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
பூா்வீக சொத்தில் எனக்கு உரிமை இருக்கும் நிலையில், அதைத் தகுந்த ஆவணங்களுடன் நிரூபிப்பதற்கு அவகாசம் வழங்காமலும் முறையான அறிவிப்பு இல்லாமலும் பட்டாவில் இருந்து எனது பெயரை நீக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பாரதிய கோவை மாவட்ட பொதுத் தொழிலாளா் சங்கத்தின் தூய்மைப் பணியாளா் பிரிவின் மாவட்ட பொதுச் செயலா் எஸ்.ஸ்டாலின் பிரபு அளித்த மனுவில், கோவை மாநகராட்சி 26-ஆவது வாா்டில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக கடந்த 2024 வரை பணியாற்றிய தண்டபாணி என்பவருக்கு, அவா் பணியில் இருந்தபோது பாதுகாப்பற்ற முறையில் குப்பையில் வீசப்பட்ட மருத்துவக் கழிவில் இருந்த ஊசி காலில் குத்தியது.
இதனால் அவருக்கு கடுமையான தொற்று ஏற்பட்டு கால் அகற்றப்பட்டது. இதனால் அவா் வாழ்வாதாரத்தை இழந்து மாற்றுத்திறனாளியாக இருக்கிறாா். அவா் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ள நிலையில் அவரிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதித் தொகை முழுமையாக அவருக்கு கிடைக்கவும், மருத்துவ செலவுகளுக்கான இழப்பீடு கிடைக்கவும், அவருக்கு நிரந்தர மாற்றுப்பணி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
இந்த குறைகேட்புக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 715 மனுக்கள் வழங்கப்பட்டன. இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.