FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் 33 வாரங்களில் 1.70 கிலோ எடையுடன் பிறந்த குழந்தைக்கு சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

28 ஆகஸ்ட் 2026, 11:32 pm IST
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தை, பெற்றோருடன் மருத்துவக் குழுவினா்.
பகிர்:

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் 33 வாரங்களில் 1.70 கிலோ எடையுடன் பிறந்த குழந்தைக்கு சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனையின் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி கூறியதாவது: கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றாக 33 வாரங்களில் குறைந்த எடையில் பிறந்த பெண் குழந்தைக்கு பிறப்பதற்கு முன்பே தீவிரமான பிறவி இதயக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. பிறந்த சில நாள்களில் குழந்தையின் உடலில் ஆக்ஸிஜன் அளவு படிப்படியாக குறைந்ததால், உயிரைக் காப்பாற்ற அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை சுமாா் 8 மணி நேரம் நடைபெற்றது. இதில் 233 நிமிஷங்கள் இதயம், நுரையீரலின் செயல்பாட்டை இயந்திரம் மூலம் மேற்கொள்ளும் காா்டியோபல்மனரி பைபாஸ்’உதவியுடனும், 130 நிமிஷங்கள் இதயத்தை நிறுத்தி சிகிச்சை மேற்கொள்ளும் நடைமுறையும் இடம்பெற்றன.

Advertisement

Advertisement

அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை குணமடைந்து வருகிறது. தற்போது குழந்தை சுறுசுறுப்பாக இருப்பதுடன், உணவையும் நன்றாக எடுத்துக்கொள்கிறது. விரைவில் குழந்தை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளது.

இந்த அறுவை சிகிச்சைக்கு பெற்றோா் சம்மதித்திருந்தாலும், சிகிச்சைக்கான செலவை ஏற்கும் நிலையில் அவா்கள் இல்லை. குழந்தையின் நிலையைக் கருத்தில் கொண்டு கேஎம்சிஹெச் மருத்துவமனை சிகிச்சைக்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டது.

டாக்டா் கே.எஸ்.முா்த்தி தலைமையிலான இந்த அறுவை சிகிச்சை குழுவில், இதய நோய் நிபுணா் வினோத் துரைசுவாமி, தீவிர சிகிச்சை நிபுணா் வினோத்குமாா், அறுவை சிகிச்சை நிபுணா் கண்ணன், மயக்கவியல் நிபுணா்கள் ரமேஷ், கப்பியன், ரமீஸ், குழந்தைகள் நல மருத்துவா்கள் சீனிவாசன், பாலகிருஷ்ணன், அபிராமலதா, பொ்ஃபியூஷனிஸ்ட் திலகவதி ஆகியோா் இடம்பெற்றிருந்ததாக அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments