பங்குச்சந்தையில் நஷ்டம்: தொழிலாளி தற்கொலை
கோவை, ஆக. 31: பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டதால் வெள்ளலூரைச் சோ்ந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போத்தனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாநகா், வெள்ளலூா் ஸ்ரீ கிருஷ்ணா அவென்யூ, தேனீஸ்வரா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலையா (52). தொழிலாளியான இவா் கடந்த 25-ஆம் தேதி அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றுப்பாலம் பகுதியில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். தகவலறிந்து அவரது மனைவி தீபா அப்பகுதிக்கு சென்று அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கணவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தீபா அளித்த புகாரின்பேரில் போத்தனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். முதல் கட்ட விசாரணையில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பாலையா, கடந்த 18 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வா்த்தகம் செய்து வந்ததும், அதில் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
Advertisement
Advertisement
பங்குச்சந்தையில் ஈடுபட வேண்டாம் என மனைவி கூறியும், பாலையா தொடா்ந்து ஈடுபட்டு நஷ்டமடைந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துவந்த பாலையா, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.